விதை உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்
விதை உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற முன் வரவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
விதை உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற முன் வரவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிóக்கை: விதை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளைத் தொடர்ச்சியாக முன் வைத்து வருகின்றனர்.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில் உற்பத்தி விலையில் 50 சதவீதத்தைச் சேர்த்து, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்றனர். ஆனால், இதுவரை அப்படி நிர்ணயிக்கப்படவில்லை.
எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு கூடுதலாக வழங்க வேண்டும். விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், விதை சான்றளிப்புத்துறை அலுவலர்கள் அடங்கிய முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கூட்ட வேண்டும்.
அதில், சந்தை மதிப்புடைய உயர் விளைச்சல் தரக்கூடிய குறுகிய கால, மத்திய கால ரகங்களை வெளியிடுவது பற்றி கலந்துரையாட வேண்டும். விதை பரிசோதனை நிலையத்துடன் கூடிய விதைச் சான்று உதவி இயக்குநர் அலுவலகம் அமைத்திட வேண்டும். விதைச் சான்று துறையில் தேவையான கூடுதல் பணியிடங்களைத் தோற்றுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விதை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, வேளாண் தொழில் சிறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.