முகப்பு
தமிழ்நாடு

நெல்லை  அருகே பச்சையாற்றில் வெள்ளம்: 10 கிராமங்கள், 500 ஏக்கர் நிலங்களை சூழ்ந்தது

திருநெல்வேலி அருகே பச்சையாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் திடியூர் பகுதியில் புதன்கிழமை கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. 500 ஏக்கரில் நிலங்கள் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்தன. கிராம மக்கள் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:45 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே பச்சையாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் திடியூர் பகுதியில் புதன்கிழமை கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. 500 ஏக்கரில் நிலங்கள் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்தன. கிராம மக்கள் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பின. வடக்குப்பச்சையாறு அணை செவ்வாய்க்கிழமை நிரம்பியதை அடுத்து அணையிலிருந்து உபரிநீர் 600 கனஅடி பச்சையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நம்பியாறு அணை நிரம்பிய நிலையில் அணைக்கு வந்து கொண்டிருந்த 2000 கனஅடி உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் இவ்விரு அணைகளுக்குட்ப்பட்ட 25 க்கும் மேற்பட்ட மானாவாரி, பாசனக் குளங்களும் நிரம்பி வழிகிறது.

இதனால் புதன்கிழமை அதிகாலை பச்சையாற்றில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. திடியூர் அருகே வெள்ளநீர் கால்வாய் தடுப்பணையில் இருந்து வெளியேறிய வெள்ளம் திடியூர், தமிழாக்குறிச்சி, அதை சுற்றியுள்ள பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. தகவலறிந்த திடியூர் ஊராட்சித் தலைவர் அ. பரமசிவன் முயற்சியில் கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோரை மீட்டு அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் கீழத்திடியூர், தமிழாக்குறிச்சி, மேலத்திடியூர், இலந்தகுளம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 500 ஏக்கரில் நடவு செய்து சில தினங்களான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. தகவலறிந்த பொதுப்பணித்துறை, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அங்கு சென்று தடுப்பணை அருகில் 2 ஜெ.சி.பி. இயந்திரங்கள் மூலம் குழித் தோண்டி ஆற்றுக்கு செல்லும் வகையில் வெள்ளநீரை திருப்பி விட்டதாலும், மழை இல்லாததால் வெள்ளம் குறைந்தது.

இது குறித்து ஊராட்சித் தலைவர் கூறியதாவது: பச்சையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் திருப்பி விடப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. விளை நிலங்கள் மூழ்கியதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளநீர் கால்வாய் பணிகள் முடியாததால் மழைக் காலங்களில் வெள்ளம் ஊருக்குள் செல்ல நேரிடுகிறது என்றார் அவர். தமிழாக்குறிச்சியை சேர்ந்த விவசாயி மனுவேல் கூறுகையில், நதிநீர் இணைப்புத் திட்டத்திற்காக பச்சையாற்றின் குறுக்கே திடியூரில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளநீர் திட்டத்திற்கான கால்வாய் வெட்டும் பணி முடியாத காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு நிலங்கள் சேதமடைந்து வருகிறது.

வெள்ளத்தால் திடியூர், தமிழாக்குறிச்சி, செங்குளம் உள்ளிட்ட பகுதியில் நடவு செய்து சில தினங்கள் ஆன நிலையில் 150 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர் பச்சையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், தருவை தாம்போதி பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்து சென்றது. புதன்கிழமை பகலில் மழை குறைந்ததால் நம்பியாறு, பச்சையாற்றில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →