பெப்சி நிறுவனத்துக்கு தாமிரவருணி நீர்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் அமையவிருக்கும் பெப்சி ஆலைக்கு தாமிரவருணி ஆற்றிலிருந்து குறைந்த விலையில் நீர் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் அமையவிருக்கும் பெப்சி ஆலைக்கு தாமிரவருணி ஆற்றிலிருந்து குறைந்த விலையில் நீர் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.
திமுகவைச் சேர்ந்த சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் மு.அப்பாவு இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
தாமிரவருணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 20 கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகர்கள் மற்றும் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமையவிருக்கும் பிரதிஷா பிசினஸ் சொலுசன்ஸ் பிரைவேட் லிமிடெட் (பெப்சி சாப்ட் டிரிங் சொலுசன் பிரைவேட் லிமிடெட்) என்ற நிறுவனத்துக்கு, தாமிரவருணி நதியிலிருந்து 37.50 ரூபாய்க்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே உள்ள குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, அதை ரத்து செய்ய வேண்டும் என, ராதாபுரம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அப்பாவு, சிப்காட் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார்.
அந்த மனு மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் இதுகுறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசின் முதன்மை செயலர், பொதுப் பணித்துறை செயலர், சிப்காட் நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.