முன்கூட்டியே விடுதலை கோரிய நளினியின் மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ்
தண்டனை காலத்துக்கு முன்னதாகவே விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தண்டனை காலத்துக்கு முன்னதாகவே விடுதலை செய்ய கோரி ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான நளினி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் குற்றவாளியான நளினி ஸ்ரீகரன் தற்போது வேலூர் சிறையில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக அரசுக்கு கடந்த அக்டோபர் 22, 2014 அன்று கடிதம் அனுப்பினார்.
Advertisement
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் கடந்த 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் நளினிக்கு மரண தண்டனை விதித்தது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
பின்னர் தமிழக அரசு கடந்த 2000 ஆம் ஆண்டு, அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவின்படி, நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இந்நிலையில் தமிழக அரசு 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த 2,200 ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்தது. தனக்கும் அவர்கள் போன்று சலுகை வழங்கி விடுதலை செய்ய வலியுறுத்தி நளினி தமிழக அரசுக்கு மனு அளித்தார். ஆனால், அவரது மனு நிராகரிப்பட்டது.
இதையடுத்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆயுள்தண்டனை கைதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகை போல், தனக்கும் சலுகை அளித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள தன்னை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார். மேலும், தனது மனு குறித்து குறிப்பிட்ட நாள்களுக்குள் முடிவு எடுக்கவும் வலியுறுத்தினார்.
மனுவை இன்று விசாரித்த நீதிபிதி எம்.எம்.சுந்தரேஷ், இதுகுறித்து தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும், வழக்கு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.