ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டுதமிழக அரசின் பொறுப்புக்கு விட்டுவிட வேண்டும்: பழ. நெடுமாறன்
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தமிழக அரசின் பொறுப்புக்கு விட்டுவிட வேண்டும் என்றார்
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தமிழக அரசின் பொறுப்புக்கு விட்டுவிட வேண்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன். புதுக்கோட்டையில் காமராஜபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுமனை புகுவிழா, அம்முன்னணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மொழி அடிப்படையில் தனித்தனியாக பண்பாடுகள் உள்ளன. அந்தப்பண்பாட்டுக்குள் உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ தலையிடுவதென்பது முற்றிலும் தவறானது. அந்த வகையில் சங்ககாலத்திலிருந்து ஏர் தழுவுதல், ஜல்லிக்கட்டு போன்றவை தமிழர்களால் வீரவிளையாட்டுக்களாகக் கருதப்படுகிறது.
அதைச்சட்டப்பூர்வமாக தடுப்பது என்பது தமிழர்களுக்கே உரிய பண்பாட்டில் குறுக்கிடுவதாகவும். இதைப் போல பிறமாநிலங்களுக்கும் அவரவர் பண்பாட்டுக்கு ஏற்ப சில பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் மறைந்துவிடும், புதியதாகத் தோன்றும். அந்த வகையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு பிரச்சினையில் மத்திய அரசு தலையி்ட்டு தமிழக அரசின் பொறுப்புக்கு விட்டு விட வேண்டும்.சென்னை மழைவெள்ளப் பேரிடரில் குற்றம்சாட்டுவதற்கு இது தருணமல்ல: சென்னை, கடலூரில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் எல்லாவற்றையும் இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்து புதிய வாழ்க்கை அமைத்துக்கொடுப்பதே தற்போது முக்கியம். அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று மக்களின் துயர் துடைக்கும் வேலையைப் பார்க்க வேண்டும்.
ஒருவர் மீது மற்றொருவர் குற்றம்சாட்டுவதற்கான தருணமல்ல. தவறுகளை பிறகு விசாரிக்கலாம். தற்போது அதற்கு அவசரம் இல்லை. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் சர்வகட்சிகள், தொண்டு நிறுவனம், தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவை முதல்வர் அமைத்து இக்குழுக்கள் மூலமாக நிவாரண உதவிகளைக்கொண்டு சேர்க்க வேண்டும்.மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்:
இந்த மழை வெள்ளத்தால் ஏறத்தாழ 380 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாகக்கலந்துவிட்டது. ஆனால், 10 டிஎம்சி, 50 டிஎம்சி. தண்ணீருக்காக பிற மாநிலங்களிடம் போராடிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பேரிடர் ஏற்பட்டதற்குப்பிறகாவது,தமிழகத்திலுள்ள ஆறுகளை இணைக்க வேண்டும். ஏரி, குளங்கள், பாசனக்கண்மாய்களையும் தூர்வார வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆற்று மணல் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். மழை நீரை சேகரிப்பதை அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் கட்டடங்களில் கட்டாயமாக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் கைது தொடர்வது கண்டனத்துக்குரியது:
கடந்த 30 ஆண்டுகளில் 600 -க்கும் மேல்பட்ட மீனவர்களை இலங்கை கடல்படை படுகொலை செய்துள்ளது. உலகின் 5 -வது பெரிய கடல்படையை வைத்துள்ள இந்திய அரசால் தன்னுடைய சொந்தக்குடிமக்களை பாதுகாக்க முடியவில்லை.தமிழக மீனவர்களை இலங்கை கடல்படை கைது செய்வதையும் தடுக்கவில்லை. மாறாக இலங்கைக்கு ஆயுதப்பயிற்சியும், போர்க்கப்பலையும் இந்தியா வழங்கியுள்ளது. தமிழக மீனவர்களை பலி கொடுத்தாவது இலங்கை அரசின் தயவைப் பெற வேண்டுமென இந்தியா முயற்சி செய்கிறது. இந்த முயற்சி தொடருமானால் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும்.
அண்டைநாடுகளுடன் நட்புறவு வளர வேண்டும்:
பாகிஸ்தானுக்கு இந்தியப் பிரதமர் சென்றது அந்நாட்டுடனான பகைமையை முடிவுக்கொண்டு வரும் நல்ல முயற்சியாகும். பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தியாவைச்சுற்றியுள்ள அனைத்து நாடுகளிடமும் இந்தியா நல்லுறவுடன் இருக்க வேண்டும். ஆனால், நல்லுறவுக்காக நமது நாட்டு மக்களை பலி கொடுத்துவிடக்கூடாது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், போட்டியிட்டால் யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்தும் எங்கள் அமைப்பின் செயற்குழுவைக்கூட்டி முடிவு செய்வோம். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்றார் பழ. நெடுமாறன்.
இதில், மாநிலதுணைத்தலைவர் துரைமதிவாணன், கவிஞர் காசிஆனந்தன், கா. அய்யநாதன், த.நா. சத்தியமூர்த்தி, அமுதன் ஆகியோர் உடனிருந்தனர்.