முகப்பு
தமிழ்நாடு

வடகிழக்குப் பருவ மழை சராசரியை விட 53 சதவீதம் அதிகம்: ரமணன்

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை சராசரியைவிட 53 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.

Updated On : 31 டிசம்பர், 2015 at 5:56 PM
பகிர்:

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை சராசரியைவிட 53 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.

சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி:

வடகிழக்கு பருவ மழையின் போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால், நிகழ் ஆண்டில் மழை 68 செ.மீ. பதிவாகியுள்ளது. இது சராசரியைவிட 53 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

கடந்த 2013 ஆம் ஆண்டில் சராசரியைவிட 33 சதவீதம் அளவுக்கு குறைவான மழையே பெய்தது. இதைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கன மழை பெய்த போதும், அதைத்தொடர்ந்து மழை ஏதும் இல்லை. ஆனால், 2015 ஆம் ஆண்டில் நல்ல மழை பெய்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு பெய்த மழைக்கு ஈடாக தற்போது மழை பெய்துள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மழை பதிவாதியுள்ளது. இந்த ஆண்டு 181.5 செ.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரியைவிட 64 சதவீதம் அதிகமாகும்.

திருவள்ளூர் மாவட்டத்தின் சராசரி மழையளவு 59 செ.மீ. ஆக இருக்கும் நிலையில் நிகழ் ஆண்டில் 146 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரையில், சராசரியைவிட 104 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 79 செ.மீ. இருக்கும் நிலையில் தற்போது 160 செ.மீ. மழை பெய்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உருவான எல் நினோ மற்றும் அசாதரண பருவநிலை காரணமாக இந்த ஆண்டு கன மழை பெய்துள்ளது.

மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வரும் நாள்களில் மழை இல்லாவிட்டால், வடகிழக்குப் பருவமழை நின்றுவிட்டது என கருதலாம் என்றார் ரமணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.