முகப்பு
தமிழ்நாடு

பழனியருகே நீர்வளம் நிறைந்த இடத்தில் ஆறுஅடி உயரம் வரை பருத்தி விளைச்சல் அமோகம்

இந்தியாவில் பருத்தி சாகுபடி முக்கியமான பணப்பயிராக இருப்பினும், வளரும் நாடுகளிலுள்ள பருத்தி விவசாயிகளுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவே இலாபம் கிடைப்பதால் முன்னேறிய நாடுகளிலுள்ள

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

பழனி அருகே தண்ணீர் வளம் நிறைந்த இடத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயி செடிகளை சுமார் ஆறுஅடி உயரம் வரை வளர்த்து சாதனை செய்துள்ளார்.

இந்தியாவில் பருத்தி சாகுபடி முக்கியமான பணப்பயிராக இருப்பினும், வளரும் நாடுகளிலுள்ள பருத்தி விவசாயிகளுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவே இலாபம் கிடைப்பதால் முன்னேறிய நாடுகளிலுள்ள பெரும்பாலும் போட்டியிட முடிவதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் இந்தியாவிலும் மெக்சிகோவிலும் பருத்தி செடிகள் வளர்க்கப்பட்டதற்கு அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் உள்ளன. தற்கால இந்தியாவிலும் பருத்தி சாகுபடி தொடர்ந்து வருகிறது.  இந்தியாவில் தமிழ்நாடு பருத்தி சாகுபடியில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.  திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில வருடங்களுக்கு முன் பலநூறு ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டிருந்தது. 

இதனால் இப்பகுதியில் ஏராளமான ஜின்னிங் மில்கள் இயங்கி வந்தது. தண்ணீர் குறைவான கரிசல் நிலங்களில் இந்த பருத்தி நன்றாக விளைந்த நிலையில், சமீப காலமாக இப்பகுதிகளில் மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் ஆகியன பயிரிடப்பட்டு வருகிறது.  தற்போது மீண்டும் பருத்தி சாகுபடியை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.  பொதுவாக, அதிகமாக தண்ணீர் நின்றால் சோளம், பருத்தி போன்றவை சாகுபடி குறையும்,  ஆனால் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் ராஜீவ் நகர் என்ற இடத்தில் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி செடிகளை பயிரிட்டு நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளார்.

அதிகமாக தண்ணீர் வசதி, அருகேயே குளம் உள்ள நிலையில் இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பருத்தி செடிகளை நட்டு அதிகமான தண்ணீர் நிற்காத வண்ணம் வாய்க்கால்களை உயர்த்தி வேண்டும்போது மட்டும் தண்ணீர் விட்டு செடிகளை வளர்த்துள்ளார்.  சாதாரணமாக வளரும் பருத்தி செடிகள் சுமார் மூன்றடி, நான்கடி உயரம் மட்டுமே உள்ள நிலையில் இவர் தோட்டத்தில் உள்ள செடிகள் சுமார் ஆறுஅடி உயரம் வரை வளர்ந்துள்ளது.  அது மட்டுமன்றி ஒரு செடியில் குறைந்த பட்சம் 20 காய்கள் பிடித்துள்ளது.  பல செடிகளிலும் பருத்திக்காய்கள் நல்லவளர்ச்சி பெற்று வெடித்து பஞ்சுகளாக மாறிவிட்டது.  தற்போது தினமும் இந்த வயல்பரப்பில் பருத்தி பறிக்கப்பட்டு வருகிறது.  இது மூன்று மாத காலம் தொடரும்.  

இதுகுறித்து விவசாயி மணி தெரிவித்ததாவது, இதே வயலில் கடந்த ஆண்டுகளில் நெல், கரும்பு உள்ளிட்ட பல சாகுபடி செய்துள்ளேன்.  ஆனால் இந்த முறை வித்தியாசமாக பருத்தி சாகுபடி செய்யலாம் என விவசாயத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்கள் பரிந்துரையின் படி புதியரக பருத்தி விதைகளை நேர்த்தியாக நட்டதில் தற்போது நல்ல விளைச்சல் வந்துள்ளது.  மிகமிக குறைந்த அளவே ரசாயன உரங்களையும், அதிக அளவு இயற்கை உரங்களையும் பயன்படுத்தியுள்ளேன்.  மற்ற பயிர்களை போல இதை உடனடியாக விற்க வேண்டிய அவசியம் இல்லை. 

பஞ்சை இருப்பு வைத்து நல்லவிலை கிடைக்கும்போது விற்கலாம்.  வெள்ளகோயில், மூலனூர், கோவை, சேலம் உள்ளிட்ட பல இடங்களிலும் பருத்தியை மொத்தமாக கொள்முதல் செய்யும் நிலையங்கள் உள்ளன.  தொடர்ந்து நிலத்தில் ஒரே பயிரை சாகுபடி செய்து மண்ணை வெறுமனே ஆக்காமல் மாற்று சாகுபடி செய்வது நிலத்துக்கும் நல்லது என்பதால் இந்தமுறை மாற்றி பயிர் செய்தது நல்ல பயனை தந்துள்ளது என தெரிவித்தார்.  பருத்தி துணிகள் தயாரிப்புக்கு மட்டுமன்றி மேலைநாடுகளில் ரூபாய் நோட்டு தயாரிப்புக்கும், காகிதங்கள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.