காஞ்சிபுரம் பழைய ரயில் (கிழக்கு) நிலையத்தில் சீரமைக்கப்படாமல் உள்ளது. இங்கு சமூக விரோதிகள் அடைக்கலமாகி வருகின்றனர். எனவே, இதைச் சீரமைத்து, கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் 2 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் திருமால்பூர் - சென்னை கடற்கரை - திருமால்பூர், அரக்கோணம்-செங்கல்பட்டு, திருப்பதி - புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் புதிய, பழைய ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில், அதிகாலை 5.31 மணிக்கு காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்துக்கு வரும் முதல் ரயிலாகும். இதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூருக்குச் செல்லும் மின்சார ரயில் இரவு 10.24 மணிக்கு பழைய ரயில் நிலையத்துக்கு வந்து செல்கிறது. இதுவே இங்கு வரும் கடைசி ரயிலாகும்.
இதற்கு இடைப்பட்ட நேரங்களில் திருமால்பூர்-சென்னை கடற்கரை - திருமால்பூர், அரக்கோணம்-செங்கல்பட்டு - அரக்கோணம், திருப்பதி-புதுச்சேரி - திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 22 முறை இயக்கப்படும் ரயில்கள் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
தினமும் ஆயிரக்கணக்கானோர் பழைய ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரையில் வருவாய் கிடைக்கிறது.
ரயில் நிலையத்தில் சமூக விரோதச் செயல்கள்!
முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில் நிலையம் பரந்து விரிந்து காணப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை, காஞ்சிபுரத்தில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்க முற்பட்டால், கூடுதல் ரயில்களை நிறுத்தி வைக்கும் அளவுக்கு பழைய ரயில் நிலையத்தில் இடவசதி உள்ளது. ஆனால் மக்களுக்கு அதிக அளவில் பயன்படும் இந்த பகுதி, இரவில் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டது. இரவு 9 மணிக்கு மேல் குடிமகன்கள்தான் ரயில் நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இவர்கள் இரவில் வரும் பயணிகளைத் தாக்கி, அவர்களிடம் இருந்து நகை, பணத்தை வழிப்பறி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இரவில் ரயில் நிலைய வளாகத்தில் போதிய விளக்கு வசதி இல்லாததாலே இந்த நிலை தொடர்கிறது. இதுகுறித்து காவலர்களிடம் புகார் செய்தால், இது எங்கள் எல்லை இல்லை, செங்கல்பட்டில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்புகின்றனர். இதை வழிப்பறிக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
எனவே காஞ்சிபுரம் புதிய, பழைய ரயில் நிலையத்தில் ரயில்வே புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் மின் விளக்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.