விருதுநகர் நகராட்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கிய அமைச்சர்கள்
விருதுநகர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
விருதுநகர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு காய்ச்சல் வரும் முன் காப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, நகராட்சி தலைவர் மா.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்கள்.
Advertisement
இதில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும். அங்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் மருந்து மாத்திரைகளும் தயாராக உள்ளன. மேலும், இக்காய்ச்சல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயத்தை தொடர்ந்து காலை, மாலை என நான்கு வேலை அளித்தால் கட்டுப்படுத்தலாம். இதேபோல் ஒவ்வொரு வார்டு பகுதியிலும் கசாயம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அமைச்சர்கள் கசாயத்தை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி, ஒன்றியச் செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவருமான மூக்கையா, நகரச்செயலாளர் மற்றும் நகர்மன்ற உறுப்பினருமான முகமது நெயினார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.