காரைக்குடியில் எச். ராஜா வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு சம்பவம்: சிவகங்கை மாவட்ட எஸ்.பி நேரில் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 9-வது வீதி வடக்கு விஸ்தரிப்புப்பகுதியில் உள்ள பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவின் வீட்டில் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியச் சென்ற சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் துரை செவ்வாய்க்கிழமை சம்பவம் நடந்த வீட்டிற்குச்சென்று விசாரணை நடத்தினார்.

காரைக்குடிக்கு எச். ராஜா வரும்போது இங்கு தங்குவது வழக்கம். அவருக்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்பு உண்டு. சம்பவம் நடந்த அன்று எச். ராஜாவின் சகோதரர் பாஸ்கர், அவரது மனைவி தங்கியிருந்தனர்.மர்மநபர்கள் 2பேர் திடீரென்று அவரது வீட்டின் எதிரே இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வீட்டின் முன்புற கதவில் பெட்ரோல் குண்டுகளை வீசினா். இதில் வீட்டுக்கதவு மற்றும் முன்புறப்பகுதி சேதமடைந்தன. அப்பகுதியில் கண்ணாடித்துண்டுகள் சிதறியது.
சத்தம் கேட்டதும் எச். ராஜாவின் வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த போலீசாரும் ஓடி வந்து பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல்அறிந்ததும் காரைக்குடி டி.எஸ்.பி முத்தமிழ்,வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை சம்பவம் நடந்த வீட்டிற்குச்சென்று செவ்வாய்க்கிழமை காலையில் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் அறிந்ததும் எ.ராஜா வீட்டின் முன்பாக பா.ஜ.க-வினர் மற்றும் இந்து முன்னணியினர் திரண்டனர்.
மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி காரைக்குடி பெரியார்சிலைப் பகுதியில் இந்துமுன்னணி மாவட்டச்செயலாளர் அக்னி பாலா தலை மையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி 1 பெண் உள்பட 42 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வெடிகுண்டு வீச்சு சம்பவத்தையடுத்து எச். ராஜாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.