முகப்பு
தமிழ்நாடு

மதுபானக் கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-புதுவை அதிகாரிகள் ஆலோசனை

மதுபானக் கடத்தலைத் தடுப்பது தொடர்பாக தமிழகம்-புதுவை மாநில உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:03 AM
பகிர்:

மதுபானக் கடத்தலைத் தடுப்பது தொடர்பாக தமிழகம்-புதுவை மாநில உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசு மதுபானங்களை கொள்முதல் செய்து விற்று வருகிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதுபானங்கள் அரசு மற்றும் தனியார் மூலம் விற்கப்படுகிறது.

தமிழகத்தைக் காட்டிலும் மதுபானங்கள் விலை புதுவையில் மிகவும் குறைவு என்பதால் இங்கிருந்து தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் மதுபானங்கள் கடத்தப்படுகின்றன.

இதனால் தமிழகத்தில் மதுபான விற்பனைக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் மதுபான கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-புதுவை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழக அரசு தரப்பில் கலால் துறை ஆணையர் மகேஸ்வரன், கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா, கலால் வடக்கு மண்டல எóஸ்.பி. பெரோஸ் கான், கடலூர் கூடுதல் எஸ்.பி. திருமலைசாமி, விழுப்புரம் கூடுதல் எஸ்.பி பாண்டியராஜ், கலால் உதவி ஆணையர்கள், புதுச்சேரி கலால் துறை ஆணையர் டாக்டர் கந்தவேலு, கலால் உதவி ஆணையர் ஆபேல் ரொசாரியோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் தமிழக கலால் ஆணையர் மகேஸ்வரன் கூறியதாவது:

தமிழகத்தின் எல்லையொட்டி மாநிலங்களான புதுவை, ஆந்திரம், கர்நாடக மாநில கலால்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வது வழக்கம். அதே போல் தற்போது புதுச்சேரியிலும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். மதுபானக் கடத்தலில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வது, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் 9, கடலூரில் 5 சோதனைச் சாவடிகள் இயங்கி  வருகின்றன. அதே போல் நடமாடும் ரோந்து படையினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் காரைக்காலை ஒட்டிய நாகப்பட்டினம் மாவட்டத்திலும் மதுபானக் கடத்தலை தடுப்பதில் இரு மாநிலங்களும் இணைந்து செயல்படுகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.