30 கி.மீ. தொலைவுக்கு காத்திருக்கும் சரக்குப் பெட்டக லாரிகள்: சுங்க அதிகாரிகளின் செயல்பாட்டில் சுணக்கம்
ஏற்றுமதி- இறக்குமதிப் பணியில் சுங்கத் துறை அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதால், துறைமுகத்திலிருந்து
தமிழ்நாடு30 கி.மீ. தொலைவுக்கு காத்திருக்கும் சரக்குப் பெட்டக லாரிகள்: சுங்க அதிகாரிகளின் செயல்பாட்டில் சுணக்கம்
ஏற்றுமதி- இறக்குமதிப் பணியில் சுங்கத் துறை அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதால், துறைமுகத்திலிருந்து
ஏற்றுமதி- இறக்குமதிப் பணியில் சுங்கத் துறை அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதால், துறைமுகத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு சரக்குப் பெட்டக லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் அவல நிலை உள்ளதாக, லாரி ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அண்மையில் சென்னை சுங்கத் துறை அதிகாரிகளிடம் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
சென்னை துறைமுகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் இரண்டு சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் கையாளப்படுகின்றன. இதற்கேற்ப சாலைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வந்தது.
ரூ. 270 கோடி செலவில் அமைக்கப்பட்ட துறைமுக இணைப்புச் சாலைத் திட்டப் பணிகள் பெருமளவு முடிவுற்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏதாவது ஒரு பிரச்னை மூலம் பல ஆண்டுகளாக நிலவிவரும் சரக்குப் பெட்டகப் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால் கடந்த ஓராண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில் கடந்த இருபது நாள்களுக்கும் மேலாக சரக்குப் பெட்டக முனையங்களில் பணியில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் ஆவணப் பரிசோதனையில் தேவையற்ற சுணக்கம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.
சி.பி.ஐ. சோதனை எதிரொலி: இதுகுறித்து சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநர்கள் நலச் சங்க நிர்வாகி முருகன் கூறியது:
சென்னை துறைமுகத்தில் கடந்த மே 14-ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர்ச் சோதனை நடத்தினர். அப்போது, முனையங்களில் பணியில் இருந்தபோது முறைகேடுகளில் ஈடுபட்ட சுங்கத் துறை அதிகாரிகள் பிடிபட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு சி.பி.ஐ. பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை சுங்கத் துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதையடுத்து ஏற்றுமதிக்கான ஆவணங்களை தீர ஆய்வு செய்த பிறகுதான் சரக்குப் பெட்டகங்களை உள்ளே அனுப்ப முடியும் என்று சுங்கத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதே நிலையைத்தான் இறக்குமதியாகும் சரக்குப் பெட்டகங்களிலும் கடைப்பிடிக்கின்றனர்.
இதனால் நீண்ட வரிசையில், நாள் கணக்கில் உணவு, மாற்று உடையின்றிக் காத்திருக்கும் அவலத்திற்கு உள்ளாகி வருகிறோம். கடந்த மூன்று வாரங்களில் மூன்று முறை வேலைநிறுத்தம் செய்துவிட்டோம். அவ்வப்போது உயரதிகாரிகள் தலையிட்டு சமாதானம் செய்கின்றனர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றார்.
வேலை நிறுத்தத்தால் பல கோடி இழப்பு: சுங்கத் துறை அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து வெங்காய ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த பெரியநாயகம் கூறியது:
துறைமுகம்- சுங்கத் துறை அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு இல்லை. சுங்க அதிகாரிகளின் போக்கு குறித்து துறைமுக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.
அதேபோல சுங்க அதிகாரிகளும் தங்களின் பணி அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற மனநிலையில் உள்ளனர். மணிக்கு இவ்வளவு சரக்குப் பெட்டகங்கள் உள்ளே சென்றாக வேண்டும் என்ற நிலையில், அதற்கேற்ற வகையில் ஆவணங்களைச் சோதனையிட நேர வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். சந்தேகம் ஏற்படும் சரக்குப் பெட்டகங்களை தனியாக நிறுத்திவிட்டு வழக்கமான பணிகளை விரைவாக மேற்கொள்ளலாம்.
தற்போது இந்தப் பிரச்னையால் எந்த நேரமும் திடீர் வேலைநிறுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஏற்றுமதியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
எனவே சென்னை துறைமுகத்தில் சுமுகமாகப் பணிகள் நடைபெற வேண்டுமெனில் அதிகாரம் மிக்க ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்றார்.
முதல்வர் தலையிட வேண்டும்: இந்தப் பிரச்னை குறித்து சுங்க அதிகாரிகளிடம் கேட்டால், தங்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது.
மேலும் அதிகாரிகள் பற்றாக்குறையும் இருக்கிறது. சுணக்கத்திற்கு வேறு உள்நோக்கம் ஏதும் இல்லை என்கின்றனர். இதனால், பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலை தொடர்கிறது.
சென்னை துறைமுகத்தில் நிலவும் பிரச்னைகள் நிச்சயமாக தமிழக தொழில் துறையைப் பாதிக்கும். எனவே யார் மீது தவறு இருந்தாலும், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவில் சர்வேதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
இதுவே இத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தக அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.