முகப்பு
தமிழ்நாடு

பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி: தமிழகத்தில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் 

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மாதத்துக்குள் உரிய அனுமதிகளை

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மாதத்துக்குள் உரிய அனுமதிகளை பெற்றுத் தர மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 அதன்படி, பிரதான துறைகளைச் சேர்ந்த 4 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் தெரிவித்துள்ளார்.
 தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு சென்னையில் வரும் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
 முன்னதாக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு செய்து கொண்டு மாநிலத்தில் தொழில்களைத் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
 புரிந்துணர்வு செய்து கொண்டுள்ள நிறுவனங்கள் உடனடியாகத் தொழில்களைத் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழில்களைத் தொடங்குவதற்குரிய அனைத்து அனுமதிகளையும் ஒரு மாதத்துக்குள் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இந்த அனுமதிகள் அனைத்தையும் பெற்றுத்தரவும், அவற்றின் நிலைகளை பின்தொடர்ந்து அதிலுள்ள சிக்கல்களைக் களையவும் மண்டல வாரியாக தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், பிரதான துறைகளைச் சேர்ந்த நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, தமிழகத்திலுள்ள மாவட்டங்கள் மத்திய, வட, தென், மேற்கு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
 ஒவ்வொரு மண்டலமும் ஆறு முதல் ஏழு மாவட்டங்களைக் கொண்டதாகவும், ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து, அவர் வெளியிட்ட உத்தரவு: பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்துக்கு பொறுப்பு அதிகாரியாக தொழில்துறை கூடுதல் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
 காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் அடங்கிய வட மண்டலத்துக்கு தொழில் துறை துணைச் செயலாளர் ஹனிஸ் சாப்ராவும், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களை அடக்கிய தென் மண்டலத்துக்கு பொறுப்பு அதிகாரியாக சிப்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.செல்வராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மேற்கு மண்டலத்துக்கு, தொழில் துறையின் மற்றொரு துணைச் செயலாளர் ஜி.லதா, பொறுப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தனது உத்தரவில் சங்கர் தெரிவித்துள்ளார்.
 அதிகாரிகளுக்கு பணி என்ன: ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் தொழில் தொடங்க வரும் பரிந்துரைகளைப் பரிசீலித்து அவற்றுக்கு உரிய அனுமதிகளைப் பெற்றுத் தருவதே, சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரிகளின் பொறுப்பாகும்.
 அனுமதிகளைப் பெற்றுத் தருவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், மண்டல பொறுப்பு அதிகாரிகள் தொழில் துறை செயலாளரின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்று அதிலுள்ள பிரச்னையைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களுக்கு உரிய அனுமதிகளை ஒரு மாதத்துக்குள் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதே பொறுப்பு அதிகாரிகளின் பிரதானப் பணியாகும்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.