முகப்பு
தமிழ்நாடு

இயந்திர நடவு மூலம் ஏக்கருக்கு 40-45 மூட்டை நெல் மகசூல் பெறலாம்: ஆட்சித் தலைவர்

இயந்திர நடவு முறையின் மூலம் ஏக்கருக்கு 40 முதல் 45 மூட்டைகள் நெல் மகசூல் பெறலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் கூறினார்.

தமிழ்நாடு

இயந்திர நடவு மூலம் ஏக்கருக்கு 40-45 மூட்டை நெல் மகசூல் பெறலாம்: ஆட்சித் தலைவர்

இயந்திர நடவு முறையின் மூலம் ஏக்கருக்கு 40 முதல் 45 மூட்டைகள் நெல் மகசூல் பெறலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் கூறினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:28 AM
பகிர்:

இயந்திர நடவு முறையின் மூலம் ஏக்கருக்கு 40 முதல் 45 மூட்டைகள் நெல் மகசூல் பெறலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், குன்னூர் பகுதியில் விவசாயப் பணிகளை வியாழக்கிழமை ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்கும் வேளாண்மைக்கு, வேளாண் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இச்சூழலில் வேளாண்மையில் இயந்திரங்கள் இன்றியமையாததாகவும், அவசியமானதாகவும் மாறி வருகிறது. வேளாண்மையில் இயந்திரமயமாக்கலின் முத்தாய்ப்பாய் நெல்லுக்கு நடவு இயந்திரம் திகழ்கிறது.

சாதாரணமாக ஒரு ஏக்கர் நெல் நடவு செய்ய 25 கிலோ நெல் விதை தேவை. நெல் விதைப்பதற்கு 8 சென்ட் நாற்றங்கால் தேவை. 8 சென்ட் நாற்றாங்காலில் சாதாரணமாக விதைக்கும்பொழுது, நாற்றங்காலிலேயே களையெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இயந்திர நடவு முறையில் ஏக்கர் ஒன்றுக்கு 12 கிலோ விதை போதுமானது. 1 சென்ட் நாற்றங்கால் இடம் போதுமானது. விதைத் தேவையில் 13 கிலோ வரை சிக்கனம் செய்யலாம். மேலும் நாற்றங்கால் ஒரு சென்டில் விதைப்பதால், பராமரிப்பதும் எளிதாகிறது. களை எடுக்க வேண்டிய அவசியமே ஏற்படாது. ஒரு சென்ட் நாற்றங்கால் அமைப்பதற்கு பதிலாக தட்டுகளிலும் நாற்றுகளை வளர்த்து நடவு மேற்கொள்ளலாம். இதற்கு 80 தட்டுகளிலுள்ள நாற்றுகள் ஒரு ஏக்கருக்கு போதுமானது. நெல் இயந்திர நடவு முறையில் 14 முதல் 18 நாள் நாற்றுகள் பறித்து நடப்பட வேண்டும். 18 நாட்கள் நாற்றுகளை உரிய நேரத்தில் நடுவதால் நாற்றுகள் வீரியமாக வளர்ந்து, உற்பத்தி திறன் மிக்க சிம்புகளை அதிகமாக உருவாக்குகிறது.

இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகள் கோனா களைக் கருவி கொண்டு நட்டு 10-ம் நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை உருட்ட வேண்டும். கோனா களைக் கருவி உருட்டுவதால், பக்கச் சிம்புகள் அதிகளவில் வெடித்து தூர்கள் நன்கு கட்டும். நீரையும் அதிகம் பாய்ச்சாமல், காய்ச்சலும் பாய்ச்சலுமாக கொண்டு செல்ல வேண்டும். இதனால் 30 சதம் வரை நீரினை சிக்கனம் செய்யலாம். உரங்கள் பிரித்து 4 முறையாக இடுவதால், இலைச் சுட்டுப்புழு மற்றும் நெல் தண்டு துளைப்பான் பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம்.

இயந்திர நடவு மேற்கொண்டு வேளாண் தொழில் நுட்பங்களை கடைபிடிக்கும் பட்சத்தில், சாதாரண முறையில் ஏக்கருக்கு 30 முதல் 35 மூடைகள் எடுக்கும் வேளையில் இம்முறையினால் ஏக்கருக்கு 40 முதல் 45 மூடைகள் மகசூல் எடுக்கலாம். இயந்திர நடவு முறை வேளாண் தொழிலாளர் பற்றாக்குறையினை நீக்குவதுடன் அதிக மகசூலுக்கும் வழி வகை செய்கிறது. இதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.

தமிழக அரசும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.1200 வழங்கி ஊக்குவித்து வருகிறது. விவசாயிகள் இம் முறையைப் பயன்படுத்தி செலவினைக் குறைத்து அதிக லாபம் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →