நெல்லையில் போக்குவரத்துக் கழக பணிமனையில் பரிதாபம்: பேருந்து மோதி ஊழியர் சாவு
திருநெல்வேலியில் திங்கள்கிழமை அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பேருந்து மோதியதில் பணியில் ஈடுபட்டிருந்த மாற்றுத் திறனாளி ஊழியர் இறந்தார்.
திருநெல்வேலியில் திங்கள்கிழமை அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பேருந்து மோதியதில் பணியில் ஈடுபட்டிருந்த மாற்றுத் திறனாளி ஊழியர் இறந்தார்.
பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் ரோஹ்னிகிருஷ்ணன் (35). மாற்றுத் திறனாளியான இவர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் திருநெல்வேலி வண்ணார்பேட்டை பணிமனையில் தற்காலிக பணியாளராக பணி செய்து வந்தார்.
ரோஹ்னிகிருஷ்ணன் திங்கள்கிழமை காலை வழக்கம்போல், பேருந்துகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது பணிமனையில் இருந்து ஓட்டுநர் ஒரு பேருந்தை வழித்தடத்தில் இயக்குவதற்காக எடுக்க முயன்றாராம்.
எதிர்பாராத விதமாக பின்னோக்கி வந்த பேருந்து ரோஹ்னிகிருஷ்ணன் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரோஹ்னிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.