தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டம் :10 ஆண்டுகளில் 54 லட்சம் விவசாயிகள் பங்கேற்பு
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் மகசூல் பாதிப்பில் இருந்து மீள மேற்கொள்ளப்படும் தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளில் 54 லட்சம் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் மகசூல் பாதிப்பில் இருந்து மீள மேற்கொள்ளப்படும் தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளில் 54 லட்சம் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆண்டு கடும் மழை-வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான விவசாயிகள் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு வாய்ப்புள்ளது.
மத்திய-மாநில அரசுகளின் மானியத்துடன் தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தேசிய-கூட்டுறவு வங்கிகள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. 2003-ஆம் ஆண்டு முதல் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக இயங்கி வருகிறது. பிரீமியத் தொகையில் 50 சதவீதத் தொகையை தமிழக அரசு செலுத்துகிறது. மீதமுள்ள தொகையை சம்பந்தப்பட்ட விவசாயி செலுத்த வேண்டும். புயல், வெள்ளம், வறட்சி, இடி, மின்னல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் மகசூல் குறைபாடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. விண்ணப்பித்தால் குறைபாடு குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, நஷ்டஈடு அளிக்கப்படும்.
ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு பயிர்:
ஒரு பயிரை குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக விளைவித்திருக்க வேண்டும். இதுகுறித்த கள ஆய்வுகள் செய்யப்பட்டு அவை காப்பீட்டு தகுதிக்குரிய பட்டியலில் சேர்க்கப்படும். ஒவ்வொரு பருவத்துக்கு ஏற்றாற்போன்று காப்பீட்டுப் பட்டியலில் பயிர்கள் இடம்பெறுவது வழக்கம். குறிப்பாக, ராபி பருவம் (நவரை-கோடை) என்றால் நெல் (நவரை-கோடை), சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, துவரை, நிலக்கடலை, கரும்பு, உருளை, மிளகாய், வெங்காயம், வாழை போன்றவை இடம்பெறுகின்றன.
காரீப் பருவம் என்றால் (கார்-குறுவை-சம்பா), நெல், மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, துவரை, நிலக்கடலை, அன்னாசி, கரும்பு, வாழை, மஞ்சள், பருத்தி, கம்பு, ராகி, எள், சூரியகாந்தி போன்றவை இடம்பெற்றுள்ளன.
நெல்லுக்கு 3 பருவங்கள்:
நெல் பயிருக்கு ஏப்ரல்-ஜூன் வரையிலான கார் பருவத்துக்கும், ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான சம்பா-தாளடி பருவத்துக்கும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான நவரை பருவத்துக்கும் காப்பீடுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியான பிரீமியத் தொகை வசூலிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு:
இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் இணையும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
2000-இல் ஒரு லட்சமாக விவசாயிகள் 2010-ஆம் ஆண்டில் 10 லட்சமாக உயர்ந்தனர். 10 ஆண்டுகளில் மொத்தம் 54 லட்சம் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளனர். 2012-13-ஆம் ஆண்டில் 11.48 லட்சம் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு அதிகரிக்கும்: அக்டோபரில் இருந்து மார்ச் வரையுள்ள ரபி பருவத்துக்கான பிரீமியத் தொகை 2 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பயிர்க் காப்பீட்டுத் திட்ட அதிகாரிகள் கூறுகையில், மழை-வெள்ளம் அதிகமாக உள்ளதால், வேளாண் உற்பத்தியில் எதிரொலிக்கும். பயிர் சேதம் அடைவதுடன், மகசூல் பாதிப்பும் இருக்கலாம். இதனால், தமிழக விவசாயிகள் அதிகளவு பயிர்க் காப்பீடு செய்ய முன்வருவதற்கு வாய்ப்புள்ளது என்றனர்.
சிக்கல் என்ன?:
திட்டத்தில் இணைவதற்கு வங்கிக் கணக்கு, வேளாண் நிலத்துக்கான அடங்கல் ஆகிய இரண்டும் முக்கியம். குத்தகை அடிப்படையில் பயிரிடும் விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். ஆனால், நிலமற்ற, கூலித் தொழிலாளர்கள் காப்பீட்டில் இணைய முடியாது. மகசூல் இழப்புக்கு நஷ்ட ஈடு அளிக்கப்பட்டாலும், விவசாயிகளுக்கு தனிப்பட்ட முறையில் எந்த இழப்பும் கொடுக்கப்படுவதில்லை. கடுமையான மழை பெய்துள்ள நிலையில், தமிழக விவசாயிகளால் இந்த ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டம் கவனம் பெறும் என்று காப்பீட்டு நிறுவன வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.