ஜாக்டோ போராட்டத்தால் பாதிப்பில்லை: அரசு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியது
ஜாக்டோ போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல் இன்று இயங்கின.
ஜாக்டோ போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல் இன்று இயங்கின. மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜேக்டோ) வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கை தொடர்பாக வியாழக்கிழமையன்று மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. மேலும், பள்ளிகளுக்கு பூட்டு போடுவதாகவும் அறிவித்திருந்தனர்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகள் பணியாற்றும் ஜாக்டோ அமைப்பினர் புதன்கிழமை மாலையில் பள்ளிகளை பூட்டி விட்டு அதன் சாவியை கல்வித்துறை வசம் ஒப்படைத்தனர்.
எனினும், பள்ளிகள் அனைத்தையும் திறந்து வைத்து வழக்கம் போல் செயல்பட போதுமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி வியாழக்கிழமை காலையில் அனைத்து பள்ளிகளையும் மாவட்ட நிர்வாகம் திறந்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்களை வரவழைத்து வழக்கம் போல் இயக்கின.
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்த தகவல் வருமாறு:
கடலூர் மாவட்டத்தில் 1424 அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், 4,876 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இன்று 2,719 ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்ததாகவும், 2,157 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லையெனவும் கூறப்பட்டது. அதேப்போன்று அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மாவட்டத்தில் 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், 5,330 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் இன்று 5,126 ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி அளவில் 559 பள்ளிகள் மட்டுமே மாற்று ஆசிரியர்கள் மூலமாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக தேவையான ஆசிரியர்களை தேவைப்படும் பள்ளிக்கு அனுப்பி வைக்கவும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், கடலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் இன்று வழக்கம் போல் திறந்திருந்தன. மதிய சத்துணவும் பள்ளிகளில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஜாக்டோ அமைப்பினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் இளங்கோவன், அரிகிருஷ்ணன், டி.சண்முகம், கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.