முகப்பு
தமிழ்நாடு

திருச்சி அருகே ரூ. 36 லட்சத்துடன் மகளிர் குழுத் தலைவி தலைமறைவு

திருச்சி திருவெறும்பூர் அருகே ரூ. 36 லட்சத்துடன்  தலைமறைவான மகளிர் குழுத் தலைவியின் வீட்டை இன்று பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 13 அக்டோபர், 2015 at 10:03 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:27 PM

திருச்சி திருவெறும்பூர் அருகே ரூ. 36 லட்சத்துடன்  தலைமறைவான மகளிர் குழுத் தலைவியின் வீட்டை இன்று பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூர் அருகேயுள்ள குமரேசபுரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காதர் அலி. இவரது மனைவி இளஞ்சியம் (40). அப்பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலைவியாக இருந்து வந்தார்.

கடந்த மே மாதம் சுயஉதவிக் குழுவில் பெண்களுக்கு தெரியாமல் அவர்களின் கையெழுத்தையிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ. 36 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

Advertisement

கடந்த ஜூன் மாதம் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் சுய உதவிக் குழு பெண்களிடம் மாதத் தவணையை செலுத்தும்படி கேட்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் தாங்கள் எந்த கடனும் வாங்கவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால் ஊழியர்களுக்கும், சுய உதவிக்குழு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சுய உதவிக்குழு பெண்கள்  திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் சுய உதவிக் குழு பெண்களிடம் பணத்தை கட்டுமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு பெண்கள், குழுத் தலைவி இளஞ்சியத்தை பார்க்கச் சென்றபோது, அவர் வீட்டை பூட்டிவிட்டு கணவர் காதர் அலியுடன்  தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

இதையடுத்து சுய உதவிக்குழு பெண்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூர் போலீஸார் இதுகுறித்து விசாரித்ததில், அவர் குடியிருந்த வீடு கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது என்பதும், இந்த வீட்டை ஒருவரிடம் ரூ. 30 லட்சத்துக்கு அடமானம் வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடமும், அந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.