முகப்பு
தமிழ்நாடு

2016 தேர்தலில் எதிர்கட்சிகளே இல்லாத அதிமுக ஆட்சி: ஏ.அருண்மொழிதேவன் எம்பி

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று எதிர்கட்சிகளே இல்லாத ஆட்சி என்ற மாற்றம் ஏற்படும் என கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி தெரிவித்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:02 AM
பகிர்:

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று எதிர்கட்சிகளே இல்லாத ஆட்சி என்ற மாற்றம் ஏற்படும் என கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி தெரிவித்தார்.

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் தலைமை வகித்து சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக ஆட்சியின் நான்கான்டு சாதனைகளை விளக்கி மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சிதம்பரம் காந்திசிலை அருகே நடைபெற்ற தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் ஏ.அருண்மொழிதேவன் எம்பி தலைமை வகித்துப் பேசினார்.

அவர் பேசியது: தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை வலிவோடும், மிகுந்த சிறப்போடும், ஓட்டுமொத்த தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்றத்தாழ்வு இல்லாமல், சாதிமத வேறுபாடு இல்லாமல், அரசின் திட்டம் மக்களுக்கு செல்லும் வகையில் ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். அவரது நான்காண்டு ஆட்சியின் சாதனையை விளக்கி மக்களை சந்திக்கும் இந்த பயணத்தை தொடங்கி உள்ளோம். இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளின் தலைவர்களால் போற்றப்படுகின்ற தலைவராக, உலகத்திலேயே மிகுந்த மக்கள் செல்வாக்கு உள்ள தலைவராக ஜெயலலிதா விளங்கி வருகிறார்.

அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போது கடும் நெருக்கடி. அதற்கு காரணம் கருணாநிதி. ஆனால் அந்த நெருக்கடியை போக்கி ஜெயலலிதா அறிவித்த நூறு சதவீத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

விலையில்லா அரிசியிலிருந்து, தற்போது அறிவித்த குழந்தைகளுக்கு 16 வகையான பரிசு பொருள்கள் அறிவிப்பு வரை முதல்வர் ஜெயலலிதா வழங்கியுளளார். சிறப்பான மக்களாட்சியை வழங்கி வருகிறார்.

மக்கள் திட்டங்கள் மட்டுமில்லாமல் தமிழர்களின் உரிமைகனான காவேரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, பாலாறு பிரச்சனை ஆகிய பிரச்சனைகளை நீதிமன்றத்தின் வாயிலாக நிரந்தர தீர்வு கண்டுள்ளார். மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் செல்லும் இடம் இல்லாமல் மக்கள் எழுச்சி இல்லை. ஸ்டாலின் போகும் இடம் எல்லாம் எம்பி, எம்எல்ஏ எங்கே என்று மக்களிடம் கேட்கிறார்.

தமிழகம் முழுவதும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் அம்மாவின் திட்டத்தை நிறைவேற்ற பம்பரம் போல் சுழன்று வருவதால் மக்கள் அமைதியாக உள்ளனர். கருணாநிதி முதல்வராக இருந்த போதும், துணை முதல்வராக இருந்த போது ஸ்டாலின் ஏன் மக்களை சந்திக்கவில்லை. இப்போது மக்கள் சந்திக்க வருகிறார்.

ஆனால் அவர் போகும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் இல்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், ஜெயலலிதாவின் திட்டத்தினால் நாங்கள் மக்களை தைரியமாக சந்தித்து வருகிறோம். இன்று அனைவரும் நான்தான் முதல்வர் என்று கூறுகிறார்கள். அதுவும் எடுபடவில்லை.

அன்புமணி மாற்றம் என்று சொல்கிறார். மாற்றம் ஏற்படத்தான் போகிறது. வருகிற 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கட்சிகளே இல்லை என்ற நிலைமை என்ற மாற்றம் ஏற்படப்போகிறது. 234 இடங்களிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறும் என்ற சாதனை படைக்க உள்ளது என ஏ.அருண்மொழிதேவன் எம்பி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.