இணைய வர்த்தகம் மீது தீவிரக் கண்காணிப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரு முன்னணி நிறுவனங்கள் மூலமாக, ரூ.75 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதனால், வணிக வரி ஏய்ப்பு ஏதும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில், இணையவழி வர்த்தகம் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரு முன்னணி நிறுவனங்கள் மூலமாக, ரூ.75 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதனால், வணிக வரி ஏய்ப்பு ஏதும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில், இணையவழி வர்த்தகம் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இணைய வழி வர்த்தகங்கள் பிரபலமாகி வருகின்றன. 30 முதல் 80 சதவீதம் அளவுக்கு தள்ளுபடி அளிக்கப்படுவதால், இணையதளம் மூலம் பொருள்களை வாங்க வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக, பெருநகரங்களில் உள்ளவர்கள் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்.
வீடு தேடி பொருள்களை அளிக்க ஆயிரக்கணக்கான முகவர்கள்: பொருள்களை விற்பதற்காக, தமிழகத்தில் "பிளிப்கார்ட்' நிறுவனம் 2,783 முகவர்களையும், "அமேசான்' நிறுவனம் 1,887 முகவர்களையும் நியமித்துள்ளன.
வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து முன்பதிவு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனமானது அருகிலுள்ள முகவரைத் தொடர்பு கொண்டு விற்பனைக்குக் கொண்டு செல்லச் சொல்கிறது.
பொருள்களுக்கான விரைவு அஞ்சல் தபால் செலவு, பார்சல் செலவு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனமே எடுத்துக் கொள்கிறது. விற்கப்படும்போது வணிக வரிக்கும் சேர்த்தே போடப்படுகிறது. பொருள் விற்கப்பட்ட பிறகு, அதிலுள்ள வரியைப் பிரித்து அதை அரசுக்குச் செலுத்தும் பணியை முகவர்கள் மேற்கொள்கின்றனர்.
மிகப் பெரிய கிடங்குகள்: இணைய வழி வர்த்தகத்தைச் செய்யும் தனியார் நிறுவனங்கள் சென்னை உள்பட பல்வேறு பெருநகரங்களில் பிரம்மாண்ட கிடங்குகளை அமைத்து அதில் பொருள்களை சேகரித்து வைத்துள்ளன. மேலும், செல்லிடப்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றை விற்பனை செய்ய தனித்தனியே முகவர்களை நியமித்துள்ளன.
அறிக்கை அளிக்க அரசு உத்தரவு: இந்த நிலையில், இணையதள வர்த்தகம் அதிகரித்துவரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் அறிக்கை தர வேண்டுமென சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.
ரூ.75 கோடிக்கு வர்த்தகம்: கடந்த செப்டம்பரில் மட்டும், முன்னணி நிறுவனமான "பிளிப்கார்ட்' ரூ.47 கோடிக்கும், "அமேசான்' நிறுவனம் ரூ.26 கோடிக்கும் வர்த்தகத்தை ஈட்டியுள்ளதாக அரசுத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபரிலும் இதேபோல் விற்பனை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் முதல் வாரத்திலும் இணைய வழி வர்த்தகம் இரு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, அரசுத் துறை அதிகாரிகள் கூறியது: மொத்த விற்பனையில் இணைய வழி வர்த்தகமானது ஒன்று முதல் இரண்டு சதவீதம் வரை மட்டுமேயாகும். இதனால், சில்லறை வர்த்தகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
ஆனால், வருங்காலத்தில் இணைய வழி வர்த்தகம் மிகப்பெரிய அளவு வளர்ச்சி அடையும் போது, சில்லறை விற்பனையாளர்களும், பெரு விற்பனை நிறுவனங்களும் அதற்கேற்றாற் போன்று தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றனர்.
ஒரே மாதத்தில் ரூ.75 கோடிக்கு 2 நிறுவனங்கள் வர்த்தகம்