அண்ணா பிறந்த நாள் விழா: விருதுநகர் மாவட்ட அளவில் 14-ம் தேதி சைக்கிள் போட்டி
விருதுநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வருகிற 14-ம் தேதி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற இருக்கிறது.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வருகிற 14-ம் தேதி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) முருகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அண்ணா பிறந்த நாள் விழா வருகிற 15-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அதை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சைக்கிள் போட்டி மூன்று பிரிவுகளில் நடத்தப்பட இருக்கிறது.
Advertisement
அதில், 13 வயது வரையிலான மாணவர்களுக்கு 15 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரமும், 15 மற்றும் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ தூரமும் சைக்கிள் போட்டி நடத்தப்பட இருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்களே மிதிவண்டிகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையும் அளிக்கப்படும். அதேபோல், 4-வது இடம் முதல் 10 இடங்களை பெறுவோருக்கு தகுதி சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது. இப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தங்கள் வயதுக்கான சான்றிதழை தலைமையாசிரியரிடம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், போட்டி நடத்தப்படும் அன்றைய நாளில் காலை 6.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆஜராகவும் வேண்டும் என மாணவ, மாணவிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.