விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் இடிந்து விழும் நிலையில் பாலங்கள் விபத்துக்கு முன்பு சரி செய்யப்படுமா?
விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் உள்ள பாலங்களில் காரை பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால், விபத்து ஏற்படுவதற்கு முன்பு சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் உள்ள பாலங்களில் காரை பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால், விபத்து ஏற்படுவதற்கு முன்பு சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து வாகனங்களின் நெருக்கடியை குறைக்கவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்றடையும் வகையில் செல்வதற்கும், வருவதற்கும் தலா இரண்டு வழிப்பாதையுடன் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை அமைத்ததை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன.
இதில், விருதுநகருக்கும்-சாத்தூருக்கும் இடையே 7 இடங்களில் பாலங்கள் உள்ளன. இதுபோன்ற அதிக போக்குவரத்துள்ள சாலையில் பாலங்கள் குறுகிய அளவிலும், அடிப்பகுதியில் காரைகள் பெயந்து கம்பிகள் தெரியும் வகையில் எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. அதிலும், குறிப்பாக அக்ரார்பட்டி அருகே உள்ள பாலத்தில் தடுப்புச் சுவர் இடிந்தும், கோவில்புலிகுத்தி, துளுக்கப்பட்டிக்கும்-நடுவப்பட்டிக்கும் இடையே உள்ள பாலங்களில் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் வகையில் எலும்பு கூடாக காட்சியளிக்கிறது.
Advertisement
துளுக்கப்பட்டி, ஆசாரிபட்டி ஆகிய பாலங்களில் தடுப்பு சுவர், தடுப்பு கம்பிகளும் வாகனங்கள் மோதியதால் சேதமடைந்துள்ளது. ஏற்கனவே இப்பாலத்தில், அதிகமான சுமையைச் ஏற்றிச் செல்லும் சரக்கு போக்குவரத்து வாகனங்கள், காரைகள் பெயர்ந்த பாலம் வழியாக செல்வதால் அதிர்வு ஏற்படுவதாகவும் பேருந்து மற்றும் வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விருதுநகர்-திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் சரக்கு பேருந்து ஓட்டுநர் ராமச்சந்திரன் கூறுகையில், அதிக சுமையுள்ள சரக்குகளை ஏற்றிக் கொண்டு இப்பாலத்தில் செல்லும் போது அதிர்வு ஏற்படுகிறது. இதனால், 4 வழிச்சாலையில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள பாலங்களை பய உணர்வுடன் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால், பாலங்களிலும், அதன் ஓரப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளையும் மராமத்து பணி செய்வதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த உதவி செயற்பொறியாளர் ஒருவர் கூறுகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இச்சாலையில் சேதமடைந்த பாலங்கள் குறித்து ஆய்வு செய்து மராமத்து பணிகள் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் பாலங்கள் மராமத்து பணிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.