காவிரி பிரச்னையில் அனைத்துகட்சிகளையும் தமிழக அரசு ஒருங்கிணைக்க வேண்டும்: இரா.முத்தரசன்
காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிகளையும் தமிழக அரசு ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிகளையும் தமிழக அரசு ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கடலூர் கோண்டூரில் உள்ள டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் இல்லத்திற்கு இன்று காலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா.முத்தரசன் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் மாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியது:
டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை மிகுந்த அதிர்ச்சியளிக்கும் செயலாகும். இது தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற சாத்தியம் இல்லாத நிலையை உருவாக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபையில் அனைத்துக்கட்சிகளும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென வலியுறுத்தியதால் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்ற கொலை வழக்குகளிலும் வசதிவாய்ப்பு, அரசியல் செல்வாக்கு உடையவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, இது கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் தற்போது மிகக்கடுமையான பாதிப்பினை சந்தித்து வருகிறது. ஆக.9-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. நேரடி விதைப்பு மூலம் சம்பா சாகுபடி துவங்கியுள்ள நேரத்தில் கர்நாடகமும் தண்ணீர் வழங்கவில்லை, மழையும் பொய்த்ததால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.
காவிரி பிரச்னையில் நடுவர் மன்றம் தீர்ப்பளித்து 8 ஆண்டுகளாகிறது. அதனை அரசிதழில் வெளியிட்டு 2 ஆண்டுகளாகியும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்படவில்லை. காங்கிரஸ், பாஜக 2 கட்சிகளும் இதனை அமைத்து தரவில்லை. இதனை அமைக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டத்தில் நடைபெறும் ரயில் மறியலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும். இதுதொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும்.
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த போரில் போர்க்குற்றம், போர் விதிமீறல் குறித்து ஐ.நா.விசாரணைக்குழு அறிக்கை சமர்பித்தது. அதில் விதிமீறல் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அதனை எவ்வாறு விசாரிப்பது என்பது தொடர்பாக செப்.30ம் தேதி ஜெனிவாவில் ஓட்டெடுப்பு நடக்கிறது. இலங்கையே இதனை விசாரிப்பது என்பதை ஏற்க முடியாது.
தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சியினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். அதன்படி சர்வதேச விசாரணைக்கு மத்திய அரசே ஐ.நாவில் தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
காவிரி பிரச்னையில் நிரந்தர தீர்வு, மீத்தேன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி அக்.5-ம் தேதி திருவாரூரில் கடலூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும். மற்ற மாவட்டங்களில் கட்சியின் அகில இந்திய அறிவிப்பின் படி தேசிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
பேட்டியின் போது வழக்குரைஞர் பிரிவு மாநில தலைவர் அழகிரிசாமி, மாவட்டச் செயலர் டி.மணிவாசகம் உடனிருந்தனர்.