நெல்லை மாவட்டத்தில் வறண்டு வரும் அணைகள்
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் வறட்சி நிலவுவதால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகள் வறண்டு வருகின்றன.
திருநெல்வேலி : மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் வறட்சி நிலவுவதால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகள் வறண்டு வருகின்றன.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் 103 டிகிரிக்கு குறையாத வெப்பத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இரவில் புழுக்கம் காரணமாக தூக்கமின்றி குழந்தைகள், பெரியவர்கள் அவதிபட்டு வருகின்றனர். பகல் பொழுதை கழிக்க இளநீர், குளிர்பானங்களை தேடி செல்லும் நிலை உள்ளது.
பாபநாசம், மணிமுத்தாறு அருவிகள், களக்காடு தலையணை, பாபநாசம் தலையணை உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. புதன்கிழமை பாபநாசம் தலையணை, அகஸ்தியர் அருவி, களக்காடு தலையணைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மாணவர்களுக்கு தேர்வு முடிந்த நிலையில் சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு நடைபெற்று வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, தலையணையில் கூட்டம் அதிகளவில் இருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் வறட்சி நிலவுவதால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. எனினும் அருவிகளில் கணிசமாக நீர்வரத்து இருந்தது.
வறண்டு வரும் அணைகள்: புதன்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 101.16 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 13 கனஅடி, கடனாநதி அணைக்கு 10 கனஅடி, ராமநதி அணைக்கு 5 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 2 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 3 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்வரத்து இல்லாததால் குறைந்த கொள்ளளவு கொண்ட அணைகள் வறண்டு வருகின்றன. சேர்வலாறு, குண்டாறு, வடக்குப்பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. பாசனத் தேவைக்கு தண்ணீர் தேவை இல்லை என்பதால் சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட 10 அணைகள் மூடப்பட்டுள்ளன.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 304.75 கனஅடி தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 83.25 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 95.86 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 86.98 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 36.80 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 25 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 24.94 அடி,
குண்டாறு அணையின் நீர்மட்டம் 11.80 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 61 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 25.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 14.50 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.