தேர்தல் நேரக் கட்சிகள் ஒரு தொடர்கதை!
நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இருந்தபோதிலும், அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் களம் காண்பதில்லை. பெரிய கட்சிகளோடு அட்டை போல ஒட்டிக் கொண்டு, வெற்றிக் கனியைப் பறித்துவிடும் "லெட்டர் பேடு' கட்சித் தலைவர்களும்கூட உண்டு.
தமிழ்நாடுதேர்தல் நேரக் கட்சிகள் ஒரு தொடர்கதை!
நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இருந்தபோதிலும், அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் களம் காண்பதில்லை. பெரிய கட்சிகளோடு அட்டை போல ஒட்டிக் கொண்டு, வெற்றிக் கனியைப் பறித்துவிடும் "லெட்டர் பேடு' கட்சித் தலைவர்களும்கூட உண்டு.
நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இருந்தபோதிலும், அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் களம் காண்பதில்லை. பெரிய கட்சிகளோடு அட்டை போல ஒட்டிக் கொண்டு, வெற்றிக் கனியைப் பறித்துவிடும் "லெட்டர் பேடு' கட்சித் தலைவர்களும்கூட உண்டு.
தேர்தல் நேரத்தில் சில கட்சிகள் தோன்றும்; தேர்தல் களத்திலும் களம் காணும்; ஆனால், வெற்றியோ, தோல்வியோ சில மாதங்களில் அந்தக் கட்சிகள் காணாமல் போய்விடும் அல்லது அந்தத் தலைவர்கள் மாற்றுக் கட்சிகளில் அடைக்கலமாகிவிடுவர். ஒன்றிரண்டு கட்சிகள்தான் தொடர்ந்து பெயரளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
ஏற்கெனவே அறிமுகமான சிறிய கட்சிகள் கூட்டணிக் கட்சித் தலைமையிடம் தொகுதிகள் ஒதுக்கக் கோரி மாதக் கணக்கில் அலைந்தும் கிடைக்காத நிலையில், திடீர் கட்சிகளுக்கு உடனடியாக வாய்ப்புக் கிடைக்கும்.
1991-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து பிரிந்து எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே எஸ்.திருநாவுக்கரசு (இப்போது திருநாவுக்கரசர்), கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு திமுக தலைமை சில தொகுதிகளை ஒதுக்கியது.
1996-ஆம் ஆண்டு அதிமுகவோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்ததை எதிர்த்து, ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் விலகி தமாகாவை தொடங்கினர். தொடங்கிய சில நாள்களிலேயே தமாகாவுக்கு 20 மக்களவைத் தொகுதிகள், 40 சட்டப்பேரவைத் தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கியது.
காங்கிரஸில் இருந்து விலகி திவாரி காங்கிரஸில் சேர்ந்த வாழப்பாடி ராமமூர்த்தி, 1998-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். பாஜக- அதிமுக கூட்டணியில் சேலம் தொகுதியைப் பெற்று வெற்றியும் பெற்று, மத்திய அமைச்சராகவும் ஆனார். பாஜக ஆட்சி கவிழ்ந்தவுடன், அந்தக் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸிலேயே இணைந்துவிட்டார்.
1999-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, எம்ஜிஆர் கழகத்தில் இருந்த எஸ்.ஜெகத்ரட்சகன் வீர வன்னியர் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கினார். தொடங்கிய வேகத்திலேயே அவருக்கு அரக்கோணம் தொகுதியை திமுக அளித்தது. "உதயசூரியன்' சின்னத்திலேயே களம் இறங்கி, வெற்றியும் பெற்றார். தற்போது திமுகவிலேயே ஐக்கியமாகிவிட்டார்.
2001 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னர், அதிமுகவில் விலகியிருந்த சில தலைவர்கள் ஜாதிக் கட்சிகளைத் தொடங்கினர். முதலியார் சமூகத்தை முன்னிறுத்தி முன்னாள் எம்.பி. ஏ.சி. சண்முகம் தொடங்கிய புதிய நீதிக் கட்சி, யாதவர் சமூகத்தை முன்னிறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.கண்ணப்பன் (இப்போது ராஜ.கண்ணப்பன்) தொடங்கிய மக்கள் தமிழ் தேசம், முத்தரையர் சமூகத்தை முன்னிறுத்தி முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தொடங்கிய தமிழர் பூமி ஆகிய கட்சிகளுக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. ஆனால், ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. இவர்களில் கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் தங்களது கட்சிகளைக் கலைத்துவிட்டு அதிமுகவிலேயே இணைந்துவிட்டனர்.
இதேபோல, அந்தத் தேர்தலில் அதிமுக- காங்கிரஸ்- தமாகா இடையே கூட்டணி ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்து தமாகாவில் இருந்து வெளியேறி, காங்கிரஸ் ஜனநாயக பேரவையைத் தொடங்கிய ப.சிதம்பரத்துக்கு 2 தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கியது. இதில் ஒன்றில் வெற்றி பெற்ற ப.ரங்கநாதன் திமுகவிலேயே ஐக்கியமாகிவிட்டார். ப.சிதம்பரமும் கட்சியைக் கலைத்து
விட்டு காங்கிரஸில் மீண்டும் இணைந்தார். இதேபோல, காங்கிரஸில் இருந்து வெளியேறி "தொண்டர் காங்கிரஸ்' என்ற கட்சியைத் தொடங்கிய குமரி அனந்தனுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. அவரும் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஆனால், சில மாதங்களிலேயே கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸிலேயே இணைந்துவிட்டார்.
2006-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸின் தொழிற்சங்க அமைப்பான ஐ.என்.டி.யூ.சி.க்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இதனால், அதன் தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் களம் இறங்கினர். இதில், "இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சின்னசாமி அதிமுகவிலேயே ஐக்கியமாகிவிட்டார்.
2009-ஆம் ஆண்டில் பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து வெளியேறி, தேர்தல் நேரத்தில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கிய நடிகர் கார்த்திக்; அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கிய நடிகர் சரத்குமார் ஆகிய இருவரும் பாஜக கூட்டணியில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டனர்.
2011-ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சேர்ந்து, பெருந்தலைவர் மக்கள் கட்சியைத் தொடங்கிய என்.ஆர். தனபாலனுக்கு சில வாரங்களில் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேபோல, 2011-இல் புதுச்சேரியில் காங்கிரஸில் இருந்து ஓரம் கட்டப்பட்டிருந்த என்.ரங்கசாமி திடீரென என்.ஆர். காங்கிரûஸ தொடங்கி, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடித்தார்.
தற்போது நடைபெறவிருக்கும் (2016) தேர்தலில் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி சேர்ந்ததையடுத்து, அதில் இருந்து விலகிய அதிருப்தியாளர்கள் தொடங்கிய மனித நேய ஜனநாயகக் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததை எதிர்த்து உருவான மக்கள் தேமுதிகவுக்கு சில நாள்களிலேயே திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் உருவாகும் இதுபோன்ற கட்சிகளால் ஜனநாயகம் வலுப்பெறுமா, பலவீனமடையுமா என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம். ஜனநாயகம் நிலைத்திருக்கும் வரை இதுபோன்ற கட்சிகள் தொடர்கதைபோல தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
-பாரத் தி.நந்தகுமார்