அப்போதைய தேர்தலில் விடிய விடிய பிரசாரம் நடந்ததும், தலைவர்களைக் காண ஆண்களோடு, பெண்களும் தங்களது குழந்தைகளை மரத்தில் தொட்டில் கட்டியபடி விழித்திருந்ததும் மீண்டும் வருமா என்பது கேள்விக்குறியாகிவிட்டது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான ஆர். கிருஷ்ணன் (73).
திருநெல்வேலி மாவட்டம், சிவகிரியை அடுத்த வடுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர். வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.
1969-இல் கல்லூரியில் பயின்ற காலத்தில் மாணவர் சங்கத்தில் இணைந்து அரசியலுக்கு வந்தவர். 1977ஆம் ஆண்டு தொடங்கி இதுவரையிலும் நடைபெற்ற தேர்தல்களில் 2 முறை தென்காசி எம்.பி. தொகுதியிலும், 5 முறை வாசுதேவநல்லூர் பேரவைத் தொகுதியிலும் வேட்பாளராகப் போட்டியிட்டவர். இதில், வாசுதேவநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக 1977, 1980-இல் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர். அப்போதைய தேர்தல் நிலவரவங்கள் குறித்து அவர் கூறியதாவது:
மாறாத திமுக: கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளையும், அதன் வேட்பாளர்களையும் தோல்வியுறச் செய்யும் போக்கு திமுகவில் அன்று முதல் இன்றுவரையிலும் நீடித்து வருகிறது. ஆனால், கூட்டணி என வந்துவிட்டால் அதிமுக எப்போதும் உண்மையாக இருக்கும். 1989, 2006 பேரவைத் தேர்தல்களில் எனது தோல்விக்கு திமுகவினரது ஒத்துழையாமையும் காரணம். 1989-இல் 411 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2006-இல் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். உள்ளூர் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் தேர்தல் பிரசாரத்தில் நேரிலும் கூறினேன். ஆனால், எதிர்முகாமுடன் கைகோத்து என்னை தோல்வியடையச் செய்தனர் உள்ளூர் நிர்வாகிகள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்து வெற்றி பெற்றால் தொகுதி அவர்களுக்குச் சென்றுவிடும் என்ற அச்சத்திலும், எதிர்முகாமில் விலைபோனதற்கு விசுவாசமாக இருக்கவும் திமுகவினரிடம் அந்தப் போக்கு இருந்தது. இப்போதும் தொடர்கிறது.
விழித்திருந்த கூட்டம்: தேர்தல் ஆணையத்தின் இப்போதைய கெடுபிடிகள் அப்போது ஏதுமில்லை. எந்த நேரத்திலும் பிரசாரம் செய்வோம். எம்ஜிஆர் மாலை 6 மணிக்கு பிரசாரத்தை தொடங்கி விடிய விடிய சுற்றி வருவார். அவரைக் காண பெண்கள் கைக் குழந்தைகளைத் தூக்கி வந்து சாலையோர மரத்தில் தொட்டில் கட்டி தூங்கச் செய்வர்.
ஆனால், அவர்கள் தூங்காமல் விடிய விடிய விழித்திருந்து எம்ஜிஆரை பார்த்தனர். முதல் நாள் மாலை 6 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 10 மணி வரையிலும் எம்ஜிஆர் பிரசாரம் செய்தார். அந்த நிலைமை இப்போது இல்லை. தானாக வந்த கூட்டத்தைக் காண முடியவில்லை. அழைத்து வரப்படும் கூட்டமே பிரதானமாக உள்ளது.
தேர்தல் செலவு ரூ.17 ஆயிரம்: 1977-இல் ஒட்டுமொத்த தேர்தல் செலவும் ரூ.17
ஆயிரம் மட்டுமே. இதில், ரூ. 7 ஆயிரம் கட்சியினரிடம் வசூலிக்கப்பட்டது. ரூ.10 ஆயிரம் எனது வீட்டில் இருந்து பெற்ற தொகையாகும். அடுத்த தேர்தலில் ரூ.25 ஆயிரம் மட்டுமே செலவு. இப்போது, பண பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. பிரசாரத்துக்கு அன்று ஒரு கார் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தலைவர்கள் வந்தால் மட்டும் கூடுதலாக ஒரு கார் தேவைப்படும். எம்ஜிஆர் மட்டுமே அதிக கார்களுடன் வலம் வந்தார்.
ஊழல், வாக்குக்கு பணம்: வாக்காளர்களுக்கு பணம் அளிக்கும் நிலை அப்போதும் ஒரு சில பகுதிகளில் இருந்ததைக் காண முடிந்தது. 1989-இல் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வாக்குக்கு ரூ.20 தந்ததாகவும், நான் வெற்றிலை பாக்குகூட வாங்கித் தரவில்லை என்றும் என்னிடமே நேரில் பலர் கூறியுள்ளனர்.
ஊழலும் அப்போதிருந்தே உள்ளது. ஆனால், அப்போது செய்து தரும் பணிகளுக்காக கையூட்டு பெற்றனர். இப்போது, இமாலய ஊழல்களை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
தேர்தலில் பண பலமே மேலோங்கி நிற்பதால், ஊழலை ஒழிக்க திராவிட கட்சிகள் முன்வருவதில்லை. இளைஞர்களும், இளம் வாக்காளர்களும் இந்தக் கட்சிகளுக்கு மாற்றான கட்சிகளைத் தேடி வருகின்றனர் என்றார் அவர்.
- ஆர்.முருகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.