அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரித் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளாகியும் அந்தத் திட்டம் தொடங்கப்படாததால், நிலத்தைத் திருப்பித் தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் சுற்று வட்டாரப் பகுதி நிலத்தடியில் ஏராளமான அளவில் பழுப்பு நிலக்கரி இருப்பது ஆய்வில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, அங்கு சுரங்கங்கள் அமைக்கவும், அதன் அருகிலேயே தலா 800 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 1992-ஆம் ஆண்டு ஜயங்கொண்டம் சுற்று வட்டாரக் கிராமங்களில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கீழ் சுமார் 22 ஆயிரம் பேரிடம், ஏறத்தாழ 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை இழப்பீடாக வழங்கப்பட்டது. இந்தத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, ஜயங்கொண்டம் சிறப்பு நீதிமன்றங்களில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் உள்பட 11,489 பேர் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள் ஏக்கருக்கு ரூ. 10 லட்சம்-
ரூ. 15 லட்சம் வரை இழப்பீடு வழங்க உத்தரவிட்டன. ஆனால், இந்தத் தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை. இதனால், நிலமளித்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலங்களைத் திட்டம் தொடங்கும் வரை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிலங்களில் மேற்கொள்ளப்படும் விவசாயப் பணிகளுக்கு வங்கிகளில் கடன் பெற முடியாது. இதனால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பழுப்பு நிலக்கரித் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, நிலம் அளித்த விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரையில் தீர்வு காணப்படவில்லை.
மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் டாடா நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் திட்டம் தொடங்கப்படாததால், அந்த நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதேபோல, ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரித் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கே திரும்ப வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இந்தத் திட்டத்துக்கு 35 செண்ட் நிலம் அளித்த உடையார்பாளையம் சன்னிதி தெருவைச் சேர்ந்த தர்மராசு அய்யர் மகன் ராமதுரை (104) என்பவருக்கு ரூ. 14,85,947 வழங்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 12.8.2014 அன்று உத்தரவிட்டது. இதையடுத்து, ஜயங்கொண்டம் தனி வட்டாட்சியர் இந்தத் தொகைக்கான காசோலையை அண்மையில் ராமதுரையிடம் வழங்கினார்.
இதுகுறித்து நிலம் கொடுத்த விவசாயிகள் சங்கச் செயலர் கலியமூர்த்தி கூறியதாவது:
ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரித் திட்டத்துக்கு நிலம் வழங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தத் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால், நிலத்தில் விவசாயம் செய்ய கடன் பெறவோ அல்லது அடகு வைத்து வீட்டில் திருமணம் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவோ முடியாமல் தவித்து வருகிறோம்.
சிங்கூர் வழக்கைப் பின்பற்றி விவசாயிகளுக்கு மீண்டும் நிலத்தை திரும்ப ஒப்படைத்து, இழப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும் என்றார் அவர்.
திட்டத்துக்கு நிலம் அளித்த விவசாயி கருணாநிதி கூறியதாவது:
எனது 9 ஏக்கர் நிலத்தை இந்தத் திட்டத்துக்காக அளித்துள்ளேன். அப்போது ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, எனது வீட்டின் தேவைகள் எதையுமே நிறைவு செய்ய முடியவில்லை. குழந்தைகளைப் படிக்க வைக்க நிலத்தை அடமானமாக வைத்து கடன் பெறவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
அரசு உடனடியாக நிலத்தை எங்களுக்குத் திரும்ப வழங்க வேண்டும். அல்லது தீர்ப்பில் கூறப்பட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்கி, திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றார் அவர்.
நிலம் அளித்தவர்களின் தரப்பில் வாதாடி வரும் வழக்குரைஞர் ஜெயக்குமார் கூறியதாவது:
விவசாயிகளிடம் கையகப்படுத்தபட்ட நிலங்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 10 லட்சம்-
ரூ. 15 லட்சம் வரை வழங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தத் திட்டத்தை விரைந்து தொடங்கி, நிலம் அளித்த தங்களது குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்த வழக்குகளில் 7 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு தண்ணீரைக் கொண்டு வருவதில் பெரும் சிக்கல்கள் உள்ளதே திட்டம் தொடங்கப்படாததற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது என்றார் அவர்.
சிங்கூர் வழக்கைப் பின்பற்றி விவசாயிகளுக்கு மீண்டும் நிலத்தை திரும்ப ஒப்படைத்து, இழப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரியலூர் வந்த பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல. கணேசன், இந்தத் திட்டம் புதிய தொழில்நுட்பத்துடன் தொடங்கப்படும் எனவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.