மதுரை மாவட்டம் விளாச்சேரியில் கடந்த பல மாதங்களாக பூட்டிக்கிடக்கும் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவில்லத்தை மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்து, தமிழ் ஆராய்ச்சி கூடமாக மாற்ற தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்மொழியை செம்மொழியாக்க முதல் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர். சூரிய நாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை தமிழ் மேல் கொண்ட பற்றால் பரிதிமாற் கலைஞர் என மாற்றிக்கொண்டார்.
தனது 33 வயதில் மறைந்த பரிதிமாற் கலைஞர், தனது காலத்தில் தமிழில் நாடக இலக்கண நூல்கள் இல்லாதிருந்த குறையை போக்கும் வகையில் நாடகவியல் எனும் இலக்கண நூலை எழுதினார்.
மேலும் தமிழ் மொழியின் வரலாறு, தமிழ்புலவர் சரித்திரம், தமிழ் வியாசங்கள், மதிவாணன், ரூபாவதி, மான விஜயம், தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருது உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சென்னை பல்கலைக் கழக பாடத்திட்டத்திலிருந்து தமிழ் நீக்கப்பட்டபோது அதை மீண்டும் சேர்க்க போராடியவர்.
பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப்பற்றை போற்றும் வகையில் தமிழக அரசு விளாச்சேரியில் உள்ள அவரது இல்லத்தை பழமை மாறாமல் ரூ. 7 லட்சம் செலவில் புதுப்பித்தது. அங்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டு, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் 31.10.2007 இல் திறந்து வைக்கப்பட்டது. மத்திய அரசும் இவரது தமிழ்சேவைக்கு தபால்தலை வெளியிட்டு கெüரவப்படுத்தியது.
இந்நிலையில், நினைவு இல்லம் தமிழக அரசு ஓர் ஆண்டு முன்புவரை பணியாளர் ஒருவர் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. இதனால் பல பள்ளி, கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவியர் இந்த நினைவில்லத்திற்கு வந்து சென்றனர். மேலும் தமிழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களும் இங்கு வந்து பரிதிமாற் கலைஞரின் புத்தகங்களை தங்கள் ஆய்வுக்கு பயன்படுத்தினர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த நினைவில்லம் பூட்டிக்கிடக்கிறது.
இதனால் இவ்வில்லம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. எனவே முன்பு போல நினைவில்லத்திற்கென்று தனியாக பணியாளர் ஒருவரை நியமித்து காலை முதல் மாலை வரை திறந்து வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் ஆராய்ச்சிக் கூடமாக மாற்ற கோரிக்கை: பரிதிமாற் கலைஞர் நினைவில்லத்தில் அவர் எழுதிய தமிழ் மொழியின் வரலாறு, தமிழ்ப்புலவர் சரித்திரம், தமிழ் வியாசங்கள், மதிவாணன் உள்ளிட்ட சுமார் 10 நூல்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இல்லாமல் தமிழ்ப் பாடம் மற்றும் தமிழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தமிழறிஞர்கள் இயற்றிய நூல்கள், தமிழாக்கம் செய்யப்பட்ட பிறமொழி புத்தகங்கள் மற்றும் அவர்களது ஆராய்ச்சி குறிப்புகளையும் இடம்பெறச்செய்ய வேண்டும் என்பது தமிழார்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.