முகப்பு
தமிழ்நாடு

ஊதிய உயர்வு கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: கட்டணமின்றி சென்ற வாகனங்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விராலிமலை சுங்கச்சாவடி ஊழியர்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இதனால் சுங்கவரி வசூலிக்க ஆள் இல்லாததால் அவ்வழியே சென்ற வாகனங்கள் இலவசமாக சென்றன.

Updated On : 24 ஜனவரி, 2024 at 7:01 PM
பகிர்:


விராலிமலை:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விராலிமலை சுங்கச்சாவடி ஊழியர்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இதனால் சுங்கவரி வசூலிக்க ஆள் இல்லாததால் அவ்வழியே சென்ற வாகனங்கள் இலவசமாக சென்றன.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை-திருச்சி நான்கு வழிச்சாலை ராசநாயக்கன்பட்டி அருகே கடந்த 2009-ம் ஆண்டு சுங்கவரிச்சாவடி திறக்கப்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒப்பந்த அடிப்படையில் மும்பையைச் சேர்ந்த ஈகிள் டீப் என்ற தனியார் நிறுவனத்திற்கு சில கட்டுப்பாடுகளுடன் 9 வருடங்களுக்கு அவ்வழியே வந்து செல்லும் வாகனங்களிடம், அரசு அனுமதிக்கப்பட்ட தொகையை வசூல் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து ஈகிள் டீப் என்ற தனியார் நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் அமர்த்தி அவ்வழியே சென்று வரும் வாகனங்களுக்கு வரிவசூல் செய்து வருகிறது.
   
இந்த நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, அனைத்து கதவுகளையும் திறந்து வைத்ததால் அவ்வழியே சென்ற வாகனங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக பயணித்தன.

இதுகுறித்து ஏஐடியுசி தலைவரும், சுங்கவரிச்சாவடி ஊழியருமான கே. ரவிசந்திரன் கூறியது: கடந்த 2 வருடமாக சம்பளம் உயர்த்தப்படவில்லை,  இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்டவைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ஒப்பந்தகாரர்கள் வடஇந்தியர்கள் என்பதால் எங்களது கோரிக்கைகளை சரிவர கொண்டு சேர்க்க முடியவில்லை என்றார். ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. வாகன ஓட்டிகள் மகிழ்சியுடன் சுங்கச்சாவடியை கடந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.