ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் மறைவுக்குப் பிறகாவது உண்மைகள் வெளிவர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் மறைவுக்குப் பிறகாவது உண்மைகள் வெளிவர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி அதிமுக பிரமுகர் ஜோசப் தொடர்ந்த வழக்கில் நீதிபதி வைத்தியநாதன் இன்று இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த விடுமுறைக் கால நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதா மரணத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா 75 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறித்து வெளியான செய்திகளில், அவர் நலமடைந்தார். உணவு சாப்பிட்டார். கோப்புகளில் கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், திடீரென அவர் எப்படி உயிரிழந்தார்? அவரது மறைவுக்குப் பிறகாவது, மரணத்தில் இருக்கும் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும், மரணத்துக்குப் பிறகு அவரது மருத்துவ அறிக்கைகளைக் கொடுக்க முடியாது. எனவே, அவரது உடலை தோண்டியெடுத்து பரிசோதனை நடத்தவும் உத்தரவிடுவேன் என்று அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி வைத்தியநாதன் கூறினார்.
பிறகு, ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், மத்திய, மாநில அரசுகள் ஜனவரி 9ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.