முகப்பு
தமிழ்நாடு

பழ.கருப்பையா ராஜிநாமா ஏற்பு:துறைமுகம் தொகுதி காலியானது!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அளித்த கடிதம் பேரவைச் செயலகத்தால் ஏற்கப்பட்டது. அவர் பேரவை உறுப்பினராக இருந்த துறைமுகம் தொகுதி காலியானதாக தேர்தல்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அளித்த கடிதம் பேரவைச் செயலகத்தால் ஏற்கப்பட்டது. அவர் பேரவை உறுப்பினராக இருந்த துறைமுகம் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர் இல்லாமல் காலியாக இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த செந்தூர்பாண்டியனின் மறைவையடுத்து, அந்தத் தொகுதி ஏற்கெனவே காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியாக இருந்தால், அந்தத் தொகுதிக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும், பொதுத் தேர்தலின் போது வழக்கம்போல இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, தனது துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பதவியைக் கடந்த மாதம் 28 ஆம் தேதி ராஜிநாமா செய்தார். ராஜிநாமா கடிதத்தை அவர் சட்டப்பேரவைச் செயலகத்துக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைத்தார். இந்தக் கடிதம் பேரவைச் செயலகத்துக்கு கிடைக்கப் பெற்ற நிலையில், அவரது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் ஏற்றுக் கொண்டார்.

தேர்தல் ஆணையத்துக்கு தகவல்: பழ.கருப்பையாவின் ராஜிநாமா ஏற்கப்பட்டு, அதற்குரிய தகவல் தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், துறைமுகம் தொகுதியைக் காலியானதாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 151 ஆக இருந்தது. இரண்டு தொகுதிகள் காலியான நிலையில், அந்தக் கட்சிக்கு பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 149 ஆகக் குறைந்துள்ளது.

திமுகவின் வெற்றியைத் தடுத்தவர்: துறைமுகம் தொகுதி எப்போதுமே திமுகவின் கோட்டையாக விளங்கியது. கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் அனைத்துத் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெற்றது. முதல் முறையாக, துறைமுகம் தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக வெற்றிக் கனியைப் பறித்தது. அதிமுக சார்பில் போட்டியிட்ட பழ.கருப்பையா 53,920 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் அல்தாப் ஹூசைன் 33,603 வாக்குகள் பெற்றார். 20, 317 வாக்குகள் வித்தியாசத்தில் பழ.கருப்பையா வெற்றி பெற்றார்.

இடைத்தேர்தல் வெற்றிகள்: கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழக சட்டப்பேரவையில் ஏழு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

இந்தத் தேர்தல்கள் அனைத்திலும் ஆளும் அதிமுகவே வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.