சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 4 அறைகள் தரைமட்டம்
சிவகாசி அருகே இன்று பிற்பகலில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 அறைகள் முழுவதும் இடிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் யாருக்கும் காயமேற்படவில்லை.
சிவகாசி அருகே இன்று பிற்பகலில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 அறைகள் முழுவதும் இடிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் யாருக்கும் காயமேற்படவில்லை.
சிவகாசி அருகேயுள்ள வி.சொக்கலிங்கபுரத்தில் கதிரேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு பிற்பகல் 12.30 மணியளவில், மருந்து கலவை தயாரிக்கும் பகுதியில் உராய்தல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அந்த ஆலையில் பணியாற்றி கொண்டிருந்த 60 தொழிலாளர்களும் வேகமாக அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
Advertisement
கோடை வெயில் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக பரவியது. குறிப்பாக ஆலைப்பகுதியில் இருந்த காய்ந்த புற்களில் பற்றிய தீ அடுத்தடுத்து இருந்த அறைகளுக்கும் பரவியது.
தகவலறிந்த சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மாவட்டங்களிலிருந்து 5 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து ஏற்பட்டு சுமார் 1.30 மணி நேரத்துக்குப் பின்னரே, அவர்களால் விபத்து நடந்த ஆலைக்குள் நுழைய முடிந்தது.
இச்சம்பவத்தில், ஆலையிலிருந்த நான்கு அறைகளும் முழுமையாக இடிந்து சேதமடைந்தன. 17 அறைகள் லேசாக சேதமடைந்தன.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.