தமிழ்நாடு

சுண்ணாம்புக் கல் சுரங்கங்களால் அருகி வரும் நிலத்தடி நீர்!

அரியலூரில் பெருகி வரும் சுண்ணாம்புக் கல் சுரங்கங்களால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சி.சண்முகவேல்

அரியலூரில் பெருகி வரும் சுண்ணாம்புக் கல் சுரங்கங்களால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதால், தற்போது கனிம வளம் பெற்று விளங்குகிற பூமியாகும். கால்சியம், இரும்பு, அலுமினியம் உள்பட வேதிப்பொருள்கள் கொண்ட கலவையான கடல் அடிவண்டல், இன்று சுண்ணாம்புக் கல் ஜிப்சம், நாடியூல்ஸ் என்ற படிக வகைப் பாறைகளும் நிறைந்து காணப்படுகின்றன. அரியலூர் பகுதியில் சுமார் 60 கோடி டன் சுண்ணாம்புப் படிவும், ஒரு கோடி ஜிப்சம் படிவும் இருப்பதால் இந்த மாவட்டத்தில் அதிகளவில் சிமென்ட் ஆலைகள் உருவாகியுள்ளன. ஏறக்குறைய 3 ஆயிரம் ஹெக்டேர் வரை கனிமச் சுரங்கங்களாக உள்ளன.

இதன் காரணமாக, ஒரு காலத்தில் கொத்தமல்லிக்கு பெயர் போன அரியலூர் மாவட்டத்தில் இந்தச் சாகுபடியே இல்லாமல் போனது.

இந்தச் சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள், சிமென்ட் ஆலைகள் ஆகியவற்றால் அரியலூர் நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, குறைந்து வரும் நிலத்தடி நீர். இதனால், நகரில் குடிநீர்ப் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இரண்டாவதாக, சிமென்ட் ஆலைகளிலிருந்து வெளியேறும் மாசு காற்றில் கலந்து பலர் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கின்றனர். மூன்றாவதாக, கனரக வாகனங்களால் இந்தப் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து உண்மை கண்டறியும் குழுவின் தலைவரும், தமிழக மக்கள் முன்னணித் தலைவருமான அரங்க. குணசேகரன் கூறியதாவது:

அரியலூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகளும்,166-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்களும் இயங்கி வருகின்றன. தற்போது அரசு சிமென்ட் ஆலைகளில் ஆண்டுக்கு 5 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. 11 ஆயிரம் லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாவட்டத்தில் நாங்கள் குழுவாகச் சென்று ஆலத்தியூர், ஆதனகுறிச்சி, மணக்குடையான், துளார், பெரியாகுறிச்சி என 5 ஊராட்சிகளில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று கள ஆய்வு செய்தோம். இதில், தனியார் சிமென்ட் ஆலைகள் இந்தப் பகுதி விவசாயிகளின் நிலங்களை குறைந்த விலைக்கு கையகப்படுத்தியது தெரிய வந்தது. மேலும், அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் செய்து தருவதாக அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

அது மட்டுமல்லாது, இங்குள்ள ஒவ்வொரு சுண்ணாம்பு சுரங்கங்களையும் 200 அடி முதல் 300 அடி வரை தோண்டியுள்ளனர். இவற்றில், காலாவதியான சுரங்கங்கள் மூடப்படாமலே உள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரை மையப்படுத்தி லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தனியார் சிமென்ட் ஆலைகள் சுரங்கம் தோண்டுவதை நிறுத்தவில்லை.

சுரங்கங்களுக்கிடையே 500 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இங்கு 5 அடி,10 அடி இடைவெளிகளில் அருகருகே சுரங்கங்கள் அமைந்துள்ளன. விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா என்றால் இல்லை. எந்த அதிகாரிகளும் இதுகுறித்துக் கண்டுகொள்வதில்லை என்றார் அவர்.

விவசாயத்துக்கு பேரழிவு

அரியலூர் பகுதியில் இயங்கி வரும் சிமென்ட் ஆலைகளுக்கு எதிராகப் போராடி வரும் இளைஞர் அருள்மொழி வர்மன் கூறியதாவது:

ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் பலர் நுரையீரல் பிரச்னை, ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் இறக்கின்றனர். கர்ப்பிணிப் பெண்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

கேரள மாநிலத்தில் 45-க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன. அங்கு ஆற்றில் இருந்து கனிம வளமான மணலை எடுக்காமல் மாற்று முயற்சியை செய்கிறார்கள். ஆனால், நாம் மட்டும்தான் விளைவுகளை அறியாமல் இந்த மாவட்டத்தில் கிடைக்கும் கனிம வளத்தை வெட்டி எடுத்து கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து வெளி மாநிலத்துக்கும்,வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறோம்.

சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் மூடப்படாமல் திறந்து கிடப்பதால் பொதுமக்கள், கால்நடைகள், விவசாயத்துக்கும் பேரழிவுகள் உண்டாகின்றன. தண்ணீர், காற்று, விளைநிலங்கள் என எல்லாமே மாசு அடைந்துள்ளன. வாழவே தகுதியில்லாத மாவட்டமாக மாறியுள்ளது அரியலூர்.

எனவே, சுண்ணாம்பு சுரங்கங்களை மூட வேண்டும். மேலும், ஆலைகளை விரிவுபடுத்தக் கூடாது. சிமென்ட் ஆலைகளையும் மூட வேண்டும். இல்லையென்றால், பல கட்சிகளை ஒருங்கிணைத்து பல கட்டப் போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT