குண்டாறு அணை நிரம்பியது: கடனாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு
நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய பிறகு குண்டாறு அணை செவ்வாய்க்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி: நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய பிறகு குண்டாறு அணை செவ்வாய்க்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை நீடித்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி குண்டாறு அணையில் 11 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 13 மி.மீ மழையும், செங்கோட்டையில் 2 மி.மீ மழையும், ஆலங்குளத்தில் 1.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து இருந்து வருவதால் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1528.59 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 46 கனஅடி, கடனாநதி அணைக்கு 145 கனஅடி, ராமநதி அணைக்கு 57 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 29 கனஅடி, கருப்பாநதி மற்றும் கொடுமுடியாறு அணைகளுக்கு தலா 5 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
முதல் அணை: நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்த மழைக்கு 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் முழுக் கொள்ளளவை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 14 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 3 கனஅடி திறந்து விடப்பட்டது.
இம்மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய பிறகு முதலாவதாக குண்டாறு அணை நிரம்பியுள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 80.15 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம 1.18 அடி உயர்ந்து 93.11 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 71 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 61 அடி,
ராமநதி அணையின் நீர்மட்டம் 66 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 26.52 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 71 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 20.45 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.30 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் இருந்தது.
பாசனத் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 1054.75 அடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 75 கனஅடி, கடனாநதி அணையில் 80 அடி, ராமநதி அணையில் 40 அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.