தமிழ்நாடு

நாட்டுச் சர்க்கரை கொள்முதலில் நூதன முறைகேடு

பழனி பஞ்சாமிர்தத்துக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்வதில் நூதன முறையில் முறைகேடு நடைபெற்று வருவதாக கரும்பு விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஜெபலின்ஜான்

பழனி பஞ்சாமிர்தத்துக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்வதில் நூதன முறையில் முறைகேடு நடைபெற்று வருவதாக கரும்பு விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது. இந்தப் பஞ்சாமிர்தத்துக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருளான நாட்டுச் சர்க்கரை ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் விளையும் கரும்பில் உற்பத்தியாகும் நாட்டுச் சர்க்கரையின் தரம் நன்றாக இருப்பதாலும், இந்தப் பகுதி மண்ணின் தன்மை, நீர், தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் காரணமாகவும் இங்கு உற்பத்தியாகும் நாட்டுச் சர்க்கரையில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் மிகவும் சுவையாக இருக்கும்.

இதனால், கடந்த 25 ஆண்டுகளாக பழனி தேவஸ்தான அதிகாரிகள் நாட்டுச் சர்க்கரையை கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்து வந்தனர். இதனால் ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில வர்த்தகக் கழகம் (ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன்) மூலமாக நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தன்னிடம் உரிமம் பெற்ற 2 தனியார் நிறுவனங்கள் உதவியுடன் நாட்டுச் சர்க்கரையைக் கொள்முதல் செய்து வருகிறது.

இவ்வாறு கொள்முதல் செய்யும்போது தரமற்ற சர்க்கரையைக் கொள்முதல் செய்துவிட்டு, தரமான சர்க்கரையைக் கொள்முதல் செய்ததாகக் கணக்குக் காண்பித்து மோசடி செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட உழவர் விவாதக் குழுச் செயலர் பா.மா. வெங்கடாசலபதி கூறியதாவது:

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. விவசாயிகள் நேரடியாக இங்கு சர்க்கரையைக் கொண்டு வந்து எந்தவிதச் செலவும் இல்லாமல் மறைமுக ஏலம் மூலம் நாட்டுச் சர்க்கரை, வெல்லத்துக்கு நல்ல விலையைப் பெற்று வந்தனர்.

விவசாயிகள் சர்க்கரையை விற்கும் போது தரத்துக்கேற்ப விலை நிர்ணயம் செய்து, சரியான எடை மற்றும் ஒரு சதவீதம் விற்பனை வரி செலுத்தி வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழனி முருகன் கோயிலுக்கு பஞ்சாமிர்தம் தயாரிக்கத் தேவையான நாட்டுச் சர்க்கரையை கோயில் நிர்வாகமே நேரடியாகக் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு உரிய விலையை முறையாகக் கொடுத்து வந்தது. இதனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்ததோடு, தரமான சர்க்கரையை பஞ்சாமிர்தத்துக்குப் பயன்படுத்தும் நிலையும் இருந்தது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் பழனி தேவஸ்தானம் நேரடியாகக் கொள்முதல் செய்யாமல், மாநில வர்த்தகக் கழகம் மூலமாகக் கொள்முதல் செய்து வருகிறது. இதனால், கவுந்தப்பாடியில் கொள்முதல் விலை 60 கிலோ மூட்டை ரூ. 1,550 முதல் ரூ. 1,600 எனில், பழனி தேவஸ்தானத்துக்கு ரூ. 1,800 முதல் ரூ. 1,850-க்கு விற்கப்படுகிறது. இதனால், கொள்முதல் விலை வித்தியாசம் மூட்டைக்கு ரூ. 250 ஆகிறது.

பழனி தேவஸ்தானம் நேரடியாகக் கொள்முதல் செய்த போது விவசாயிகளுக்கு கிடைத்த விலை கிடைக்காமல், தற்போது ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பழனி தேவஸ்தானம் நேரடியாகக் கொள்முதல் செய்தால் ரூ. 60 முதல் ரூ. 80 வரைதான் செலவாகும் என்றார் அவர்.

இதுகுறித்து பழனி தேவஸ்தானத்தின் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் கேட்ட போது, "பழனி பஞ்சாமிர்தத்துக்குத் தேவையான நாட்டுச் சர்க்கரையை மத்திய அரசு நிறுவனம்தான் கொள்முதல் செய்து வழங்குகிறது. இதற்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை' என்றார்.

"பஞ்சாமிர்தம் சுவை குறைந்து வருகிறது'

தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் பி.சி. செங்கோட்டையன் கூறியதாவது:

தேவஸ்தான அதிகாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஓராண்டுக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்வர். இப்போது, இதில் 80 சதவீதம் சர்க்கரையை தனியார் மண்டிகள் மூலமாகக் கொள்முதல் செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்யும் போது ஒரு சதவீத விற்பனை வரி மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், தனியார் மண்டிகளில் கொள்முதல் செய்யும் போது விற்பனை வரி, தரகுத் தொகை என குறைந்தபட்சம் 8 சதவீதத் தொகையை அதிகமாகக் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. கவுந்தப்பாடியில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை நாட்டுச் சர்க்கரை முதல் தரம் ரூ. 1,950-ஆகவும், இரண்டாம் தரம் ரூ. 1,800-ஆகவும், மூன்றாம் தரம் ரூ. 1,650-ஆகவும் உள்ளது. பொதுவாக, பஞ்சாமிர்தம் தயாரிக்க 2, 3-ஆம் தர சர்க்கரையைப் பயன்படுத்தினால் போதுமானது.

ஆனால், இப்போது மூன்றாம் தரத்தைவிட மட்டமான சர்க்கரையை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, முதல் தர சர்க்கரை விலைக்குத் தேவஸ்தானத்துக்கு விற்பனை செய்து விடுகின்றனர். இதனால், பஞ்சாமிர்தத்தின் தரம் கடந்த ஓராண்டாக குறைந்துவிட்டது. முன்னர், பஞ்சாமிர்தத்தை குறைந்தபட்சம் 3 மாதங்கள் வைத்துச் சாப்பிடலாம். இப்போது ஒரு வாரத்துக்கு மேல் வைத்தால் கெட்டுவிடுகிறது. இதற்கு தரமற்ற சர்க்கரையைப் பயன்படுத்துவதுதான் காரணம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT