பருவ மழை தொடங்கியது: பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு 4000 கனஅடி நீர்வரத்து
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 7 அடியும் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 7 அடியும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியது. புதன்கிழமை அதிகாலையில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: பாபநாசம் அணையில் 27 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 13 மி.மீ, சேர்வலாறு அணையில் 9 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 5 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டில் அதிகபட்சம் 30 மி.மீ, குண்டாறு அணையில் 13 மி.மீ, அடவிநயினார் அணையில் 11 மி.மீ, கொடுமுடியாறு அணையில் 20 மி.மீ.
பாளையங்கோட்டையில் 8 மி.மீ, திருநெல்வேலியில் 3 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 18.4 மி.மீ, சேரன்மகாதேவியில் 14.2 மி.மீ, களக்காட்டில் 6.2 மி.மீ, தென்காசியில் 6.4 மி.மீ, செங்கோட்டையில் 9 மி.மீ, ஆலங்குளத்தில் 1.4 மி.மீ, ஆய்க்குடியில் 10.2 மி.மீ, ராதாபுரத்தில் 3 மி.மீ, நான்குனேரியில் 2 மி.மீ.
நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2101.50 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1900 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 34 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. எதிர்பார்த்தவாறு பருவ மழை தொடங்கி அணைகளுக்கு நீர்வரத்து வரத் தொடங்கி இருப்பது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 67.90 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 6.82 அடி உயர்ந்து 84.84 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.20 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 27.90 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடி,
கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 24.94 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 11.80 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 35 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 23.40 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.76 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.
குடிநீருக்காக பாபநாசம் அணையில் 104.75 கனஅடி, மணிமுத்தாறு அணையில் 200 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெருங்கால் பாசனத்துக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து 45 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது.