முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி சட்டப்பேரவை தலைவராக வைத்திலிங்கம், துணைத் தலைவராக சிவக்கொழுந்து பதவியேற்பு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக வி.வைத்திலிங்கம், துணைத் தலைவராக விபி.சிவக்கொழுந்து ஆகியோர் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:28 PM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக வி.வைத்திலிங்கம், துணைத் தலைவராக விபி.சிவக்கொழுந்து ஆகியோர் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கடந்த 6-ந்தேதி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.

இதையடுத்து தற்காலிக சட்டப்பேரவை தலைவராக சிவக்கொழுந்து எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் வியாழக்கிழமை கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்று கொண்டனர்.

இந்த நிலையில் பேரவைத் தலைவர் பதவிக்கு வி.வைத்திலிங்கமும், துணைத் தலைவர் பதவிக்கு விபி. சிவக்கொழுந்தும் பேரவை செயலாளர் மோகன்தாசிடம் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் பேரவை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி தேர்தலுக்கு வெள்ளிக்கிழமை வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருவரும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள் என்று பேரவை செயலர் மோகன்தாஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு பேரவை கூடியது. தற்காலிக சட்டபப்பேரவை தலைவர் விபி.சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி  மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பேரவைத் தலைவராக வைத்திலிங்கம் பெயரை முன்மொழிந்து, வழிமொழிந்தனர்.

இதையடுத்து ஏகமனதாக பேரவைத் தலைவராக வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தற்காலிக பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். பின்னர் பேரவைத் தலைவர் இருக்கையில் அமருமாறு வைத்திலிங்கத்துக்கு அழைப்பு விடுத்தார்.

முதல்வர் நாராயணசாமி, அதிமுக பேரவை குழுத் தலைவர் அன்பழகன், திமுக எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் வைத்திலிங்கத்தை இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நெட்டப்பாக்கம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. விஜயவேணி அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார்.

இதன் தொடர்ச்சியாக பேரவை துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதற்கு சிவக்கொழுந்து மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாததால், சிவக்கொழுந்து பேரவை துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வானதாக பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் முறைப்படி அறிவித்தார்.

இதையடுத்து பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏக்கள் அன்பழகன், சிவா ஆகியோர் சிவக்கொழுந்துவை அழைத்துச் சென்று துணைத் தலைவர் இருக்கையில் அமரவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.