இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது
தமிழ்நாடுஇளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்து மிரட்டிய நபரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீலங்கா, வவுனியா மாவட்டம், பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் விஜயசேகர் மனைவி தியாழினி (30). இவருக்கு ரிஜினா (12), டேனியல் (10) என்ற இரு பிள்ளைகள் உண்டு. 2007-ம் ஆண்டு இலங்கையிலிருந்து அகதியாய் குடும்பத்துடன் வந்து மொட்டமலை அகதிகள் முகாமில் குடியிருந்து வருகிறார். கணவர் விஜயசேகர் 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு வேலைக்காக சென்றுவிட்டார்.
யாழ்பாணம், எஸ்ராதி வீதியைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் மகன் ஜெனீஸ்டன் (32) என்பவரும் இலங்கையிலிருந்து அகதியாய் வந்து மொட்டமலை முகாமில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் தியாழினிக்கும் ஜெனீஸ்டனுக்கும் சில ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. தியாழினி குடும்பத்துடன் இலங்கைக்கு செல்ல இருப்பதாகக் கூறி வந்துள்ளார். இதற்கு ஜெனீஸ்டன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
புதன்கிழமை இரவு மது குடித்துவிட்டு வந்த ஜெனீஸ்டன், தியாழினியை ஆபாசமாகப் பேசி கத்தியைக் காட்டி மிரட்டி இலங்கைக்கு செல்லக் கூடாது என்று தகராறு செய்துள்ளார்.
இது குறித்து தியாழினி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெனீஸ்டனைக் கைது செய்தனர்.