தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்கத்தின் நிர்வாக குழுவை கைப்பற்றியது. இதையடுத்து நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் நடிகர் சங்க வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை இக்கூட்டம் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறகிற இந்த கூட்டத்துக்கு நாசர் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
கூட்டத்தில் பழம் பெரும் நடிகர் பி.யூ.சின்னப்பாவின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இதையொட்டி அவரது நூற்றாண்டு விழா குறித்த சிறப்பு வீடியோ வெளியிடப்படவுள்ளது.
இதையடுத்து, புதிய நிர்வாக குழுவின் சங்க செயல்பாடுகள் அடங்கிய வீடியோ வெளியிடப்படுகிறது. சங்கத்தின் கையெடு மற்றும் சங்க இணையதளம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் பின், பழம் பெரும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் பொற்கிழியும், விருதுகளும் வழங்கப்படுகின்றன.
புதிய கட்டடம் குறித்து...
நாசர் தலைமையிலான அணியினரின் வெற்றிக்கு நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் என்ற தேர்தல் வாக்குறுதி முதன்மையானதாக இருந்தது. இதனால், இந்தக் கூட்டத்தில் புதிய கட்டடம் குறித்து விவாதிக்கப்படுகிறது. புதிய கட்டடத்துக்கான வரைபடம் இந்த கூட்டத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
நட்சத்திர கிரிக்கெட்...
புதிய கட்டடத்துக்கான நிதியை திரட்ட முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இது குறித்தும் இதில் விவாதிக்கப்படுகிறது.
ரஜினி, கமல் பங்கேற்பு
இந்தக் கூட்டத்துக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.