நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்!
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் கார் பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் முன்கூட்டியே தொடங்கியுள்ளனர்.
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் கார் பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் முன்கூட்டியே தொடங்கியுள்ளனர்.
தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை கார் பருவ சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் சாகுபடி பணிகளை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம்.
தற்போது பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் கணிசமாக நீர் இருப்பு உள்ளதால் நிகழ் பருவத்தில் விவசாயிகள் கார் பருவ சாகுபடி பணிகளை முன் கூட்டியே தொடங்கியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், முக்கூடல், கல்லிடைக்குறிச்சி, கீழஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, வீரவநல்லூர், அரிகேசவநல்லூர், அரியநாயகிபுரம், சங்கன்திரடு, சுத்தமல்லி, பத்தமடை, மேலச்செவல், பகுதியில் விவசாயிகள் நாற்றுப் பாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடையம் வட்டாரத்தில் செல்லபிள்ளையார்குளம், ஏ.பி. நாடானூர், தீர்த்தாரப்பபுரம், பாப்பான்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் நாற்று நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இம்மாவட்டத்தில் கடனாநதி பாசனத்தில் பல்வேறு பகுதியில் உளுந்து, நிலக்கடலை போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். மேலும் நிகழ் பருவத்தில் கார் சாகுபடிக்கு ஜூன் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்மட்டம்:
புதன்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 71.70 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 82.35 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.58 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 29.40 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 24.94 அடி,
குண்டாறு அணையின் நீர்மட்டம் 11.80 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 48 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 25.15 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13.12 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது. குடிநீர் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 454.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.