நெல்லை மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை வெயில் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை வெயில் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
கோடை வெப்பத்தின் உக்கிரம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதி்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம், சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்தது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 5 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 2.8 மி.மீ, ஆலங்குளத்தில் 28.4 மி.மீ, சங்கரன்கோவிலில் 51 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மழை காரணமாக திங்கள்கிழமை வெயில் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 120.78 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 15 கனஅடியும் நீர்வரத்தும் இருந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 67.60 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 76.11 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 81.38 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 27.90 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடி,
கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 24.94 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 11.80 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 45.50 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 24.80 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13.05 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.
பாபநாசம் அணையில் இருந்து 704.75 கனஅடி, மணிமுத்தாறு அணையில் இருந்து பிரதான கால்வாயில் 100 கனஅடியும், தாமிரவருணி ஆற்றில் 200 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.