நெல்லையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீர் போராட்டம்!
திருநெல்வேலியில் இன்று காவல்துறை எடுத்த நடவடிக்கையை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி: திருநெல்வேலியில் இன்று காவல்துறை எடுத்த நடவடிக்கையை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ. வியனரசு போட்டியிடுகிறார். இம்மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் பிரசாரம் மேற்கொண்டார்.
சீமான் பிரசாரத்தையொட்டி, 7 இடங்களில் பதாகைகள் வைக்க முறையாக தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று வைக்கப்பட்டது. எனினும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பதாகைகளை போலீஸார் வைக்க அனுமதிக்கவில்லை. மேலும் பொதுமக்கள் மத்தியில் என்னையும் காவல்துறையினர் அநாகரீகமாக நடத்தினர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி பாளையங்கோட்டையில் பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் கம்புகள் கட்டி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆட்சேபம் தெரிவி்த்து இன்று திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தாமிரவருணி நதிக்கரையில் அமர்ந்து வியனரசு, திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் போராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தனர். போராட்டத்தை கைவிட மறுத்ததை அடுத்து போலீஸார் வியனரசுவை கைது செய்தனர்.