காவிரி கடைமடைப் பகுதியிலுள்ள கால்வாய்கள் சீரமைக்கப்படுமா?
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி பாசனம் பெறும் கடைமடைப் பகுதிகளில் சேதமடைந்துள்ள கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி பாசனம் பெறும் கடைமடைப் பகுதிகளில் சேதமடைந்துள்ள கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் மொத்த விவசாயப் பரப்பளவு சுமார் 1.40 லட்சம் ஹெக்டேர். அதில் 11,200 ஹெக்டேர் மட்டுமே காவிரி பாசனப்பகுதியாக இருந்து வருகிறது. மீதமுள்ள 90% விவசாய நிலங்கள் மழை, நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கின்றன. மாவட்டத்தில் ஏறத்தாழ 6 ஆயிரம் கண்மாய்கள் விவசாயத்துக்கு உதவுகின்றன. மழையை மட்டுமே நம்பி இருப்பதால் பெரும்பாலும் வறட்சி மாவட்டமாகவே இருந்து வருகிறது.
புதுகை மாவட்டத்தில் கறம்பக்குடி ஒன்றியத்துக்குள்பட்ட இச்சடியில் தொடங்கி நெடுவாசல், செரியலூர், கறம்பக்காடு, மேற்பனைக்காடு, அரசர்குளம், அத்தானி, நாகுடி வரையில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் காவிரி நீரை நம்பி விவசாயம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டில் மேட்டூர் அணை குறிப்பிட்ட காலத்துக்குள் திறக்கப்படாததால் தேவைப்படும் நேரத்தில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட காவிரி பாசனப்பகுதி விவசாயிகள், விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட நேரிட்டது. காவிரி டெல்டா பகுதி விவசாயத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது மேட்டூர் அணையில் சுமார் 40 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் இருப்பு உள்ளதால், நிகழ் ஆண்டிலும் குறித்த காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்ற கவலை விவசாயிகளிடம் எழுந்துள்ளது.
விவசாயிகள் கோரிக்கை:
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவிரி கடைமடைப் பகுதி கால்வாய்கள் பல ஆண்டுகளாக மராமத்து பணிகள் மேற்கொள்ளாமல் சிதிலமடைந்து, உருக்குலைந்து காணப்படுகிறது. மேலும், கிளை வாய்க்கால்களும் தூர்வாரப் படாமல் பல பகுதிகளில் தூர்ந்து போன நிலையில் உள்ளதால் தண்ணீர் திறக்கப்படும் காலங்களில் வயல்களுக்கு தண்ணீர் சென்றடைய முடியாத நிலை உள்ளது.
எனவே, கடைமடை பகுதியிலுள்ள வாய்க்கால்களை தூர்வாரி காவிரி நீர் செல்லும் வழித்தடங்களை சீரமைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே விவசாயிகளின் குற்றச்சாட்டாகும். எனவே, நிகழாண்டிலாவது மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவிரி கடைமடை பகுதி கால்வாய்களை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சலுகைகள் வழங்க வேண்டும்:
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச்செயலர் மு.மாதவன் கூறியதாவது:
வாய்க்காலை தூர் வாருவதுடன் மேட்டூர் அணையிலிருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்க இயலாமல் போனால், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கும் 20 மணிநேர மும்முனை மின்சாரம், இடுபொருள்கள், விதை, பயிர்க்காப்பீட்டு தொகையை அரசே செலுத்துதல் உள்ளிட்ட சலுகைகளை புதுகை மாவட்ட காவிரி கடைமடை பகுதி விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும் என்றார் அவர்.