முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் மண்டல மாநாடுகள் நடத்த, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் முடிவு

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மண்டல மாநாடுகள் நடத்துவது என தமிழ்நாடு விவசாய

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மண்டல மாநாடுகள் நடத்துவது என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் முடிவு செய்துள்ளது.

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில செயலாளர் ஏ.பி.ரவீந்திரன் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: 6-வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டு முழு கடன் தள்ளுபடி கோரிக்கை வைத்து கடன் விடுதலை மாநாடு நடத்தி கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக தொடர் போராட்டங்களை நடத்தினோம். 2016 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தமிழகத்தின் பிரதான பெரிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தங்கள் தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். அதிமுக வெற்றி பெற்று வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதல்வராக பொறுப்பேற்று முதல் கோப்பாக கையெழுத்திட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டதை வரவேற்கிறோம்.

நாட்டின் முதல் முக்கிய தேவையான உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் கடின உழைப்பால் பெறும் மகசூல் விவசாயிகளிடையே பாரபட்சம் பார்ப்பதில்லை. வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயங்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பால் ஏற்படும் நஷ்டம் விவசாயிகளிடையே பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆனால் தற்போது அறிவித்துள்ள கடன் தள்ளுபடி சலுகை தமிழக அரசு விவசாயிகளிடையே பாரபட்சம் பார்க்கிறது என்ற வருத்தமும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பெற்ற பயிர் கடன் ஆண்டு தோறும் உரிய காலத்தில் முறையாக திருப்பி செலுத்தி புதுகடன் பெறும் வழக்கம் தற்போது இல்லை. வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமல் ஆண்டு தோறும் கடனை புதுப்பிக்கும் முறையே உள்ளது. புதுப்பிக்கும் போது அவ்வாண்டில் அறிவிக்கப்படும் பயிர் கடன் தொகையில் கூடுதலாக கிடைக்கும் சொற்ப தொகையை மட்டுமே பெற்றுக்கொண்டு சாகுபடி தேவைக்கு கந்துவட்டி, மீட்டர்வட்டி, நகர அடகு மூலம் கடன் பெற்ற விவசாயிகள் கடன் சுமையால் செய்வதறியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 90 லட்சம் விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறார்கள். அதில் 11.5 லட்சம் விவசாயிகள் மட்டுமே கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்றவர்கள். 78.5 லட்சம் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுள்ளார்கள். விவசாயிகள் தற்கொலை நிகழாமல் தடுக்க விவசாயிகளின் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெஓற்ற கடன் தள்ளுபடி ஒன்றே தீர்வாகும். எனவே தமிழக முதல்வர் தமிழகத்தில் கடன் பெற்றுள்ள அனைத்து விவசாயிகளின் முழுக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விழுப்புரத்தில் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் முதல் மண்டல மாநாடு குறித்த தேதி அறிவிக்கப்படும் என ஏ.பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

பேட்டியின் போது கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் பேரூர் குஞ்சிதபாதம், நிர்வாகிகள் ராஜேந்திரன், என்.முனுசாமி, ஜி.சம்பத், வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.