தமிழகத்தில் 2017-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கையடக்க குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு வடிவில்) வழங்கப்படவுள்ள நிலையில், கட்டாயப்படுத்தி மளிகைப் பொருள்களைத் திணிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே குடும்ப அட்டைதாரர்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி பெறுவோர், சர்க்கரை பெறுவோர், காவலர் மற்றும் எந்தப் பொருளும் வாங்காதவர் என்ற அடிப்படையில் 2.07 கோடி குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர, ஆண்டுதோறும் புதிய குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2005-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட குடும்ப அட்டையின் செல்லத்தக்க காலம் 2009 டிசம்பர் வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2010 ஜனவரியில் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்குப் பதிலாக பழைய அட்டையில் உள்தாள் இணைத்து குடும்ப அட்டையின் கால நீட்டிப்பு தொடங்கியது. அன்று தொடங்கி இன்று வரையில் தொடர்ச்சியாக 6 ஆண்டுகளுக்கு உள்தாள் இணைப்பதையே வழக்கமாகக் கொண்டு வருகிறது.
பொது விநியோகத் திட்டத்தை ஒளிவுமறைவு இல்லாத வகையில் செயல்படுத்தவும், ரேஷன் பொருள்கள் பதுக்கல், கடத்தல், முறைகேடு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒழிக்கவும், போலி குடும்ப அட்டைகளை முற்றிலும் ஒழிக்கவும் "ஸ்மார்ட் கார்டு' வடிவில் குடும்ப அட்டையைத் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, ரூ. 350 கோடியில் ஸ்மார்ட் கார்டு ஒருங்கிணைப்புப் பணிகளை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ள கடந்த 2014, நவம்பர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, "ஆம்னி அகேட் சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனத்திடம், ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது, இந்த நிறுவனம், ஸ்மார்ட் கார்டு மென்பொருளைத் தயாரித்து, 2017 ஜனவரி முதல் கையடக்க குடும்ப அட்டைகளை வழங்க ஆயத்தமாகியுள்ளது.
திருச்சி, மதுரை, பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 90 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. திருப்பூர், சேலம், கோவை, தருமபுரி, திருநெல்வேலி மாவட்டங்களில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையிலும் குடும்ப அட்டைகளை கையடக்க இயந்திரத்தில் பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
ஆனால், ரேஷன் பொருள்களுடன் சோப்பு, சீரகம், கடுகு, சோம்பு, ரவை, தீப்பெட்டி, உப்பு, மிளகு என பல்வேறு வகை மளிகைப் பொருள்களை வாங்குவதற்கு நிர்பந்தம் செய்வது இன்றுவரை தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, கூட்டுறவுத் துறை மூலம் இயங்கும் கடைகளில் அதிகளவு நிர்பந்தம் உள்ளது என்கின்றனர் குடும்ப அட்டைதாரர்கள். தமிழகத்தில் மொத்தம் 34,686 நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றில், கூட்டுறவு மூலம் 33,000 கடைகளும், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 1,686 கடைகளும் இயங்கி வருகின்றன.
கூட்டுறவு பண்டகசாலை மற்றும் கூட்டுறவு அமைப்பின் மூலம் இயங்கும் சூப்பர் மார்கெட் உள்ளிட்ட கடைகளுக்கு ஆண்டுதோறும் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விற்பனை இலக்கை எளிதல் எட்ட வேண்டுமெனில், குடும்ப அட்டைதாரர்களே சரியான தேர்வு எனக் கருதுகின்றனர். குறைந்த விலையில் ரேஷன் பொருள்கள் பெற வேண்டுமெனில், ஏதாவது ஒரு மளிகைப் பொருளை வாங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், 2 கோடி குடும்ப அட்டைதாரர்களும் இந்தத் திணிப்பை கடும் எரிச்சலுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.
முன்னர் ரேஷன் பொருள் வழங்கப்பட்ட சீட்டுக்கு பின்புறம் தனியாக மளிகைப் பொருள் விவரத்தை குறிப்பிட்டு வழங்குவர். இப்போது 15-க்கும் அதிகமான மாவட்டங்களில் "பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்யப்படுவதால், ரேஷன் பொருள் விவரத்தை மட்டுமே இதில் பதிவு செய்கின்றனர்.
கட்டாய மளிகைப் பொருள் திணிப்புக்கு தனியாக துண்டுச் சீட்டு எழுதித் தருகின்றனர்.
தங்களது மேலதிகாரிகளின் நிர்பந்தம் காரணமாகவே குடும்ப அட்டைதாரர்களைக் கட்டாயப்படுத்த வேண்டியுள்ளது என்கின்றனர் நியாய விலைக் கடைப் பணியாளர்கள். எதுவாக இருந்தாலும், இனி இந்தக் கட்டாய மளிகைப் பொருள் திணிப்பு கூடாது என்பதே வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
2017, ஜனவரி மாதம் கையடக்க குடும்ப அட்டை வரும்போது கட்டாய மளிகைப் பொருள் திணிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
4.85 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ஒழிப்பு
தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை வட்டாரத்தினர் கூறியதாவது:
2017, ஜனவரி முதல் கையடக்க குடும்ப அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய குடும்ப அட்டை வழங்கக் கோரி விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு 60 நாள்களுக்குள் அட்டை வழங்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 6,20,128 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 20,522 குடும்ப அட்டைகள் அச்சடித்து வழங்கத் தயாராகவுள்ளன. இதுவரை, 4,85,123 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. கையடக்க குடும்ப அட்டை நடைமுறைக்கு வரும் போது அனைத்து முறைகேடுகளும் முடிவுக்கு வரும் என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.