முகப்பு
தமிழ்நாடு

குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு

தமிழகத்தில் இப்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள் மேலும் ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்கப்பட உள்ளன

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:49 PM
பகிர்:

தமிழகத்தில் இப்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள் மேலும் ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்கப்பட உள்ளன. இதற்காக, 6 மாதங்களுக்கு மட்டும் உள்தாள் ஒட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களுக்கு குடும்ப அட்டைகள் புதுப்பித்துத் தரப்படும். இந்தக் காலகட்டத்துக்குள் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இப்போது 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில், ரேஷன் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 1.92 கோடிக்கும் அதிகம். சர்க்கரை பெறுவோர் 10 லட்சம் பேரும், காவலர் குடும்ப அட்டை வைத்திருப்போர் 61,061 பேரும் உள்ளனர். எந்தப் பொருளும் வேண்டாம் என்ற அடிப்படையில் குடும்ப அட்டை வைத்திருப்போரின் எண்ணிக்கை 60,000.
புதிய குடும்ப அட்டைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வரும் நிலையில், தொடர் ஆய்வின் மூலம் போலி குடும்ப அட்டைகளும் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 5.19 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன.
மின்னணு அட்டைகள்: தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கவும், ரேஷன் பொருள்கள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்யவும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, ஒவ்வொரு குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணையும் குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் 5.80 கோடிக்கும் அதிகமானோருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த எண்கள் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும் அதேவேளையில், ஆதார் எண் இணைப்புப் பணியும் நடைபெற்று வருகிறது.
பல மாவட்டங்களில் இந்தப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னணு அட்டை வழங்கும் வகையில் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள மாவட்டங்களிலும் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்க உள்தாள்: அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் எண்ணை இணைத்து மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் தேவைப்படும். எனவே, இந்தக் காலகட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்கிக் கொள்ள வசதியாக தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்.
இந்தக் குடும்ப அட்டைகள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குச் செல்லத்தக்க வகையில் உள்தாள் அளிக்கப்படும். இந்த உள்தாள் ஒரு முழுப் பக்க அளவைக் கொண்டிருக்கும். அதாவது, ஆறு மாதங்களுக்கு எந்தப் பிரச்னனையும் இல்லாமல் பொதுமக்கள் பொருள்களை வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யும் வகையில் உள்தாள் இருக்கும்.
எனினும், உள்தாள் இணைக்கப்பட்ட பிறகு, அடுத்த 3 மாதங்களிலேயே மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.