உசிலம்பட்டி அருகே அரசுப்பேருந்து, ஆட்டோ மோதி விபத்து: 4 பெண்கள் பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசுப்பேருந்து, ஷேர் ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசுப்பேருந்து, ஷேர் ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கட்டகருப்பன்பட்டியில் இருந்து சுற்று வட்டாரக் கிராமங்களுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் கட்டக்கருப்பன்பட்டியில் இருந்து உசிலம்பட்டிக்கு 7 பேரை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று சென்றது. ஆட்டோவை கட்டக்கருப்பன்பட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன் ஓட்டிச் சென்றார். உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டுலுப்பட்டி பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியில் ஒரே வழியில் வாகனங்கள் செல்லுமாறு போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்ததாம்.
Advertisement
இந்நிலையில் தொட்டுலுப்பட்டி விலக்கு வளைவில் இருந்து மதுரை சாலைக்கு ஷேர் ஆட்டோ சென்றபோது, எதிரே சேலத்தில் இருந்து மதுரை நோக்கிச்சென்ற அரசுப்பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்தவர்களும் போலீஸாருடன் இணைந்து ஆட்டோவில் இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டனர்.
விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கட்டக்கருப்பன்பட்டியைச் சேர்ந்த தாயம்மாள்(70), உசிலம்பட்டி ஆனையூரை சேர்ந்த பாண்டியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விபத்தில் காயமடைந்த மற்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி கட்டக்கருப்பன்பட்டியைச் சேர்ந்த ராக்கம்மாள்(65), ஏ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ராமலட்சுமி(35) ஆகிய இருவரும் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
மேலும், கணபதி(45), வீரம்மாள்(70), ராஜாங்கம்(70) ஆகிய மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆட்டோவை ஓட்டிச் சென்ற கலைச்செல்வன் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார்.