தமிழ்நாடு

அச்சுறுத்தும் மருத்துவக் கழிவுகளுக்குத் தீர்வு!

தமிழகத்தை மட்டுமன்றி, நாட்டையே அச்சுறுத்தும் வகையிலான மருத்துவக் கழிவுகளுக்கு உரிய தீர்வு காணும் வகையில், மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள்- 2016 அமலுக்கு வந்துள்ளன.

ஆர். முருகன்

தமிழகத்தை மட்டுமன்றி, நாட்டையே அச்சுறுத்தும் வகையிலான மருத்துவக் கழிவுகளுக்கு உரிய தீர்வு காணும் வகையில், மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள்- 2016 அமலுக்கு வந்துள்ளன.

இந்தியாவில் உள்ள சுமார் 1.75 லட்சம் சுகாதாரப் பராமரிப்பு மையங்களிலிருந்து நாளொன்றுக்கு 490 டன் உயிரி மருத்துவக் கழிவுகள் சேகரமாகின்றன. இவற்றில் 450 டன் கழிவுகள் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் சராசரியாக ஒரு நோயாளியின் படுக்கையிலிருந்து 250 கிராம் வீதம் நாளொன்றுக்கு 26 டன் உயிரி மருத்துவக் கழிவு சேகரமாகிறது என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 6,246 மருத்துவமனைகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்துள்ளது. இவற்றில், அரசு மருத்துவமனைகளைத் தவிர்த்து 1,800 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 954 தனியார் மருத்துவமனைகள் மற்றும் பதிவு பெறாத தனியார் கிளினிக் வகைகளும் உள்ளன.

2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேகரமாகும் மருந்துகட்டு துணிகள், இதர வகைத் துணிகள், பஞ்சுகள், கை மற்றும் காலுறைகள், அறுவைச் சிகிச்சையின் போது அகற்றப்படும் மனித திசுக்கள், உறுப்புகள் போன்றவையும், பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்துக் குப்பிகள், பிளாஸ்டிக் சிரிஞ்சுகள், ஊசிகள் மற்றும் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உலோக பிளேடுகள், கத்திரிகள், காலியான பிளாஸ்டிக் குளுக்கோஸ் கேன்கள், டிரிப் ஏற்ற உதவும் டியூப்கள் என அனைத்து மருத்துவக் கழிவுகளும் மருத்துவமனையின் ஒருபுறம் தேக்கி வைக்கப்படும், இல்லையெனில் எரிக்கப்படும்.

இந்த அவலத்தைப் போக்க 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மருத்துவக் கழிவு மேலாண்மைத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. இப்போது, இந்தத் திட்டத்தை கடுமையாக அமல்படுத்தும் வகையில், மருத்துவக் கழிவு மேலாண்மைத் திட்டம்-2016 என்னும் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம் 1998-ஆம் ஆண்டே மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகளைக் கொண்டு வந்து சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தில், இப்போதைய சூழலுக்கு ஏற்ப பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு, மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள்-2016 என வெளியிடப்பட்டுள்ளது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆலோசனையின்படி, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், பொது சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து இந்த விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்தவுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்புடன் அகற்றி அழிக்கும் பணியில் 11 தனியார் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ன.

இதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை மாவட்டங்களுக்காக தஞ்சாவூரில் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.

வாணியம்பாடி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு காட்பாடியிலும், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சேலத்திலும், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், உடுமலைப்பேட்டை, நீலகிரி பகுதிகளுக்கு கோவையிலும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு விருதுநகரிலும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நான்குனேரி வட்டத்திலும் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கழிவுகளை சுகாதார முறையில் எரியூட்டியும், மறுசுழற்சி செய்தும் அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

இந்தத் திட்டத்தின்படி, கழிவுகளை சேகரிப்பதற்காக மருத்துவமனைகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு, பச்சை நிறங்களில் கூடைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், சிவப்புக் கூடையில் மருந்து, ரத்தம், குளுக்கோஸ், பிளாஸ்டிக் குழல் போன்ற கழிவுகளைச் சேகரிக்க வேண்டும். மஞ்சள் நிறக் கூடையில் உயிரி மருத்துவக் கழிவுகளான உடல் உறுப்புக்களின் சிதைவுகள், நஞ்சுக்கொடி, உடலுறுப்புப் பகுதிகள் ஆகியவற்றைச் சேகரிக்க வேண்டும்.

நீல நிறக் கூடையில் கண்ணாடி மருந்துக் குப்பிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள், கண்ணாடி வில்லைகள் ஆகியவற்றைச் சேகரிக்க வேண்டும். கருப்பு நிறக் கூடையில் காலாவதியான மருந்துகள், எக்ஸ்ரே கதிர் இயக்கக் கழிவுகளைச் சேகரிக்க வேண்டும்.

இந்த மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது. அவற்றை முறையாக அகற்றி சுத்திகரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் உள்ள 11 மையங்களில் தனியார், அரசு மருத்துவமனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி மருத்துவக் கழிவுகளை சுகாதார முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

மருத்துவமனைகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப தனித்தனியாகப் பிரித்து பிளாஸ்டிக் பைகளில் சேகரித்து, அந்தப் பைகளுக்கு பார்கோடு அமைக்க வேண்டும். பின்னர், இந்தக் கழிவுகளைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.

சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாகக் கழிவுகள் அகற்றப்பட வேண்டும். இவற்றைக் கண்காணிக்க அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். ஆண்டுக்கு இரு முறை இந்தக் குழு கூடி, மேலாண்மைத் திட்டச் செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரத்தினர் கூறியதாவது:

மருத்துவக் கழிவு மேலாண்மைத் திட்ட விதிகள்-2016-இல் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மருத்துவ முகாம் நடத்தினால்கூட கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். முகாமில் சேகரமாகும் கழிவுகளை அகற்ற ஒப்புதல் பெற வேண்டும். இவற்றை மருத்துவமனைகள் தவறாமல் பின்பற்றுவதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது.

திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் எனப் பெரும்பாலான மாவட்டங்களில் கண்காணிப்புக் குழு அமைத்து முதல் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களிலும் குழுவின் முதல் கூட்டம் விரைவில் நடைபெறும். மருத்துவமனைகளுக்கு உரிய எச்சரிக்கை வழங்கப்படும் என்றனர் அவர்கள்.

தமிழக எல்லைப் பகுதிகள் கேரள குப்பைமேடுகளா?

கேரளத்திலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள், தமிழகப் பகுதியான லோயர்கேம்ப்- குமுளி மலைப் பாதையிலும், கம்பத்தில் இருந்து கோம்பை செல்லும் சாலைகள், குப்பிநாயக்கன்பட்டி அருகே உள்ள காடு, கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு மலைப் பகுதிகளிலும் கொட்டப்படுகின்றன.

இதேபோல, செங்கோட்டை, புளியரை, தென்காசி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை என கேரளத்துக்கு அருகில் வரும் அனைத்து தமிழக எல்லைப் பகுதிகளிலும் கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது.
வனத் துறையும், சுகாதாரத் துறையும் அவ்வப்போது வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றன. மேலாண்மை விதிகளை அமல்படுத்தும் சூழலில், கேரளத்தில் இருந்து கழிவுகள் வருவதையும் முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT