தமிழ்நாடு

215 ஆவது குரு பூஜை விழா: மருது சகோதரர்கள் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

மாமன்னர் மருது சகோதரர்களின் குரு பூஜையை முன்னிட்டு, மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர்

DIN

மாமன்னர் மருது சகோதரர்களின் குரு பூஜையை முன்னிட்டு, மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மருது சகோதரர்களின் 215-ஆவது குருபூஜை விழா, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் உருவச் சிலைகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தேவரின அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி, பால்குடம் ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று சிலைகளுக்கு அபிஷேகம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக மாவட்டச் செயலர்கள் கோ. தளபதி, வ. வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன். முத்துராமலிங்கம், ஆ. தமிழரசி, முன்னாள் மேயர் பெ. குழந்தைவேலு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியியின் மாநகர் மாவட்டச் செயலர் சேதுராமன், மக்களவை முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி.எஸ். ராம்பாபு, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். தேமுதிக மாநகர் மாவட்டச் செயலர் சிவ. முத்துக்குமார் தலையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் மருத்துவர் என். சேதுராமன் தனது கட்சியினரோடு வந்து மாலை அணிவித்தார். தேவர் புலிப்படை இயக்கத் தலைவர் நடிகர் கருணாஸ் எம்எல்ஏ மாலை அணிவித்தார். அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்பட பல்வேறு கட்சியினர், தேவரின அமைப்புகளின் நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மநகரக் காவல் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் பி. அருண் சக்தி குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டிருந்தது.


போலீஸாருடன் மோதல்-தடியடி
குரு பூஜையை முன்னிட்டு, இரு சக்கர வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் தொடர்ந்து விசை ஒலிப்பானை எழுப்பியபடி கூச்சலிட்டுகொண்டும், இதர வாகனங்களுக்கு வழிவிடாமலும் வந்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அமைதியாகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் செல்லுமாறு கூறினர். இதனால் போலீஸாருக்கும், இளைஞர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது. இதனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் 50 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஆவணங்களோடு வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோர்டான் புறப்பட்டார் மோடி!

சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் குறைப்பு! அதிரடி சலுகை... பெறுவது எப்படி?

111 ஷெல் கம்பெனிகள் மூலம் ரூ.1000 கோடி! சிபிஐ கண்டுபிடித்த சைபர் மோசடி!

கூட்டணி குறித்து முடிவெடுக்க பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது: டிடிவி தினகரன்

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT