குறைப் பிரசவங்கள் காரணமாக, இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட 10 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றன.
சிசு மரணம், குறுகிய மற்றும் நீண்ட கால நோய், பிற்கால வாழ்க்கையில் ஏற்படும் ஊனம் போன்ற காரணங்களால் உலகம் முழுவதிலும் குறைப் பிரசவம் பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது. 37 வாரங்கள் முழுமை பெறுவதற்கு முன்பாக (259 நாள்கள் நிறைவு பெறும் முன்பாக) உயிரோடு பிறந்த குழந்தைகளே குறைப்பிரசவக் குழந்தைகள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 15 கோடி குறைப் பிரசவங்கள் நிகழ்கின்றன. 10 குழந்தைகளில் ஒரு குழந்தை குறைப் பிரசவமாக பிறக்கிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி ஒரு கோடி குழந்தைகள் குறைப் பிரசவத்தால் ஏற்படும் சிக்கல்களால் 5 வயதுக்குள் உயிரிழக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ள 184 நாடுகளில் குறைப் பிரசவம் இல்லாத நாடுகளே இல்லை. இதில் 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை குறைப் பிரசவம் எண்ணிக்கை வேறுபடுகிறது.
இந்தியாவில் ஓராண்டில் பிறக்கும் 2.70 கோடி குழந்தைகளில் 35 லட்சம் குழந்தைகள் குறைப்பிரசவக் குழந்தைகளாக உள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு 21 லட்சம் குழந்தைகள் 5 வயதுக்குள் உயிரிழக்கின்றன. இந்தக் குழந்தைகளில் 45 சதவீதத்திற்கும் மேல் (சுமார் 10 லட்சம் குழந்தைகள்) குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறைப்பிரசவத்தில் பிழைத்து வாழும் பெரும்பாலான குழந்தைகள் பெருமூளை வாதம், உணர்வுக் குறைபாடுகள், கற்கும் திறன் குறைபாடுகள், சுவாச நோய்கள் போன்ற பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றன. குறைப்பிரசவத்தோடு தொடர்புடைய நோய்கள் பெரும்பாலும் பிற்கால வாழ்க்கையிலும் தொடர்கின்றன. இதனால், தனி நபருக்கும், குடும்பத்துக்கும் உடல், உள்ளம் மற்றும் பொருளியல் அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன.
இதுகுறித்து அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் எம்.பிரியா கூறியதாவது:
குறைப்பிரசவம் உலகளாவிய பிரச்னை, 60 சதவீதத்திற்கும் மேலான குறைப்பிரசவம் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் நிகழ்கிறது. குறைந்த வருவாய் நாடுகளில் 12 சதவீதக் குழந்தைகளும், உயர் வருவாய் நாடுகளில் 9 சதவீதக் குழந்தைகளும் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன. எங்கு பிறக்கின்றன என்பதைப் பொருத்தே, குறைப்பிரசவக் குழந்தைகளின் உயிர் பிழைத்தலும் உள்ளது. ஏழைக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளன. குறைந்த வருவாய் நாடுகளில் குறைப்பிரசவத்தில் 10 சதவீதக் குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைக்கின்றன.
குழந்தைப்பேறின்போது அத்தியாவசியமான பராமரிப்பு, பிறப்புக்கு முன்னதாக ஊக்கமருந்து ஊசி (குழந்தைகளின் நுரையீரலைப் பலப்படுத்த, குறைப்பிரசவ ஆபத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஊசி மருந்து), கங்காரு தாய் பராமரிப்பு போன்ற பிறப்புக்கு பிந்தைய பராமரிப்பு (உடலோடு உடலாக தாய் குழந்தையைச் சுமத்தலும் அடிக்கடி தாய்ப்பாலூட்டுதலும்) மற்றும் தொற்றுக்கும், சுவாசப் பிரச்னைகளுக்கும் கவனம் செலுத்துதல் போன்றவை மூலம் குறைமாதக் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.
பெண்களின் உடல் வலிமை அடையச் செய்ய உணவுப் பொருள்களை எளிதில் கிடைக்கச் செய்வது, இளம் வயது திருமணத்தைத் தவிர்ப்பது, குறைப் பிரசவத்துக்கான காரணம் குறித்தும், கர்ப்பக் காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் குறைப்பிரசவத்தை பெருமளவில் குறைக்க முடியும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.